ஐபிஎல் 2018: இந்த ஆண்டு முதல் டிஆர்எஸ் முறை அறிமுகம்

டில்லி:

பிஎல் போட்டியில், இந்த ஆண்டு முதல் நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யும் முறையான  டிஆர்எஸ் முறை (TRS) முதல் முறையாக அமல்படுத்தப்பட உள்ளது.

நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டி வரும் ஏப்ரல் மாதம் 7ந்தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏப்ரல் 7ந்தேதி தொடங்கும் இந்த போட்டி மே 27ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது,

இந்த ஆண்டு முதல்  ஐ.பி.எல். போட்டியில் நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யும் முறை (டி.ஆர்.எஸ்) முதல் முறையாக நடைமுறைக்கு வருவதாக தெரிவித்தார்.

தற்போது, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடைமுறையில் இந்த முறை உள்ளது. அதுபோல தற்போது ஐபிஎல் போட்டிகளிலும் இந்த முறை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், ஒவ்வொரு அணியும் ஒரு இன்னிங்சில் ஒரு முறை மட்டுமே நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யலாம். அந்த அப்பீல் வெற்றிகரமாக முடிந்தால் மட்டுமே தொடர்ந்து அப்பீல் செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலும் கிரிக்கெட் வீரர் ஷமி மீதான குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் நீரஜ்குமார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார். அவரது விசாரணை அறிக்கை கிடைத்ததும் முடிவு எடுக்கப்படும் என்றார்.

இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டி தொடரில் பேட்டிங்கில் அதிரடியாக கலக்கி சிறந்த ‘ஸ்டிரைக் ரேட்’ வைக்கும் வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.

ஐபிஎல் தொடக்க விழாவில் முதல் ஆட்டத்தில் மோதும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் கேப்டன்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. தொடக்க விழா முடிந்த மறுநாளே 2 லீக் ஆட்டங்கள் இருப்பதால் சம்பந்தப்பட்ட அணிகளின் கேப்டன்கள் உடனடியாக போட்டி நடைபெறும் நகரங்களுக்கு திரும்புவது சிரமம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறபபடுகிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: IPL 2018: Introduction of TRS system since this year, ஐபிஎல் 2018: இந்த ஆண்டு முதல் டிஆர்எஸ் முறை அறிமுகம்
-=-