ஐபிஎல்.2018: டிவில்லியர்சின் அதிரடியில் பஞ்சாபை வீழ்த்தியது பெங்களூரு அணி

பெங்களூரு:

நேற்று இரவு நடைபெற்ற  பெங்களூரு, பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல்  போட்டியில் , பெக்களூரு அணி வீரர்  டிவில்லியர்சின் அதிரடி காரணமாக 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் 8வது லீக் ஆட்டம் நடைபெற்றது.

இந்த போட்டியில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

‘டாஸ்’ ஜெயித்த பெங்களூரு அணி  கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன் காரணமாக பஞ்சாப் அணி மட்டையுடன் களமிறங்கியது. 19.2 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதிகபட்சமாக லோகேஷ் ராகுல் 47 ரன்களும் ( 30 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் அஸ்வின் 33 ரன்களும், கருண் நாயர் 29 ரன்களும் எடுத்தனர். ஆரோன் பிஞ்ச் (0), யுவராஜ்சிங் (4 ரன்) ஜொலிக்கவில்லை.

பெங்களூரு தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும், கிறிஸ்வோக்ஸ், வாஷிங்டன் சுந்தர், கெஜ்ரோலியா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து  156 ரன்கள் இலக்கை நோக்கி பெங்களூரு அணியினர் களமிறங்கினர்.  தொடக்கத்தில் தடுமாறிய பெங்களூரு அணியினர் போகப்போக ஸ்டெடியாக ஆடத் தொடங்கினார்.

பெங்களூரு அணி வீரரான  பிரன்டன் மெக்கல்லம் ரன் ஏதும் எடுக்காத நிலையில் சுழலில் சிக்கி வெளியேறி னார். அதுபோல கேப்டன் விராட் கோலியாலும் தாக்குப்பிடிக்க முடியாமல் 21 ரன்னில் சுருண்டார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  குயின்டான் டி காக் 45 ரன்னிலும், சர்ப்ராஸ் கான்  ரன் ஏதும் எடுக்காத நிலையில் சூழலில் சிக்கி வெளியேற்றப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து களமிறிங்கிய  டிவில்லியர்ஸ், மன்தீப்சிங் ஜோடி அணியை தாங்கி பிடித்து விளையாடினர்.. பஞ்சாப் சுழல் பந்து வீச்சாளர்களான  முஜீப் ரகுமான், மொகித் ஷர்மாவின் பந்துகளை சிக்சர்களாக அடித்து விளாசினர்.

வெற்றியை நோக்கி கம்பீரமாக சென்றுகொண்டிருந்த நேரத்தில், டிவில்லியர்ஸ் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 40 பந்தில்  57 ரன்கள் எடுத்திருந்தார். (, 2 பவுண்டரி, 4 சிக்சர்) தொடர்ந்து மன்தீப்சிங் 22 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார்.

வெற்றிக்கனியை பறிக்க 5 ரன்களும், 1 ஓவர் மட்டுமே இருந்த நிலையில் போட்டி விறுவிறுப்படைந்தது. பஞ்சாப் அணியின் பவுலர், மொகித் ஷர்மா வீசிய பந்தை பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் பவுண்டரிக்கு விரட்டினார். அதுபோல 3வது பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பியதால் பெக்களூரு வெற்றிக்கனியை பறித்தது.

பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வாஷிங்டன் சுந்தர் 9 ரன்னுடனும், கிறிஸ் வோக்ஸ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இதுவரை 2 ஆட்டத்தில் ஆடியுள்ள பெங்களுரு அணி தங்களது மாநிலத்தில் முதல் வெற்றியை ருசித்துள்ளது. அதுபோல பஞ்சாப் அணிக்கு இது முதல் தோல்வி.