ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 4வது லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி எளிதாக வீழ்த்தியது.

ஐதராபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் ரெகானே 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

பின்னர் வந்த வீரர்கள், ஐதராபாத் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஒற்றை இலக்கு ரன்களில் ஆட்டமிழந்தனர்.

சஞ்சு சாம்சன் நிதானமாக விளையாடி 49 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில், ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்களே எடுத்தது.

முதல் ஓவரின் கடைசி பந்தில் ஷார்ட் (4 ரன்) ரன் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். நிதானமாக ஆடிய ரகானே (13) சித்தார்த் பந்தில் வெளியேறினார்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் ஸ்டோக்ஸ் வெறும் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன், திரிபாதி ஜோடி ஓரளவுக்கு தாக்குபிடித்தது.  14வது ஓவரில் திரிபாதி (17) விக்கெட்டை வீழ்த்திய ஷாகிப் அல் ஹசன், சாம்சனையும் (49 ரன், 42 பந்து) பெவிலியனுக்கு அனுப்பி ராஜஸ்தானுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார்.

94 ரன்னில் 5 விக்கெட்டை பறிகொடுத்த ராஜஸ்தான் அணியால் பின்னர் மீளவே முடியவில்லை. கடைசி நம்பிக்கையாக இருந்த ஜோஸ் பட்லர் 6 ரன் எடுத்து ரஷின்கான் சுழலில் வெளியேறினார்.

ஓரளவுக்கு தாக்குபிடித்த ஸ்ரேயாஸ் கோபால் 18 ரன்னில் புவனேஸ்வர் குமார் வேகத்தில் வெளியேற ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்தது. குல்கர்னி 3, லாக்லின் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சன்ரைசர்ஸ் அணியில் சிறப்பாக பந்துவீசிய சித்தார்த் கவுல், ஷாகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட்டும், ரஷித்கான், ஸ்டான்லேக், புவனேஸ்வர் குமார் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்ததாக 126 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக விக்கெட் கீப்பர் சகா மற்றும் ஷிகர் தவான் களம் இறங்கினர். இரண்டாவது ஓவரிலேயே சகா 5 ரன்னில் அவுட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 6 ரன். அதன் பின் தவானுடன், கேப்டன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். ஷிகர் தவான் ரன் வேட்டை நடத்தினார். 33 பந்தில் அவர் அரைசதம் அடித்தார். அவருக்கு வில்லியம்சன் உதவி செய்தார். தொடர்ந்து இருவரும் அதிரடியாக விளையாடியதால் சன்ரைசர்ஸ் அணி 15.5 ஓவரிலேயே ஒரு விக்கெட் இழப்புக்கு 127 ரன் எடுத்து இமாலய வெற்றியை பெற்றது.

ஷிகர் தவான் 57 பந்தில் 13 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 77 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். வில்லியம்சன் 35 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 36 ரன் எடுத்தார். 25 பந்துகள் மீதம் இருக்கும் போதே 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி சன்ரைசர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகன் விருது தவானுக்கு வழங்கப்பட்டது.