ஐதராபாத்:

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று இரவு மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில், சிஎஸ்கே 1 ரன் வித்தியாசத்தில் தனது வெற்றியை இழந்தது.

இதற்கு காரணம், தோனி ரன்அவுட் ஆனதே என்று பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறி உள்ளார்.  ஆட்டத்தின்போது, தோனி ரன் அவுட் ஆனது  முக்கிய தருணம் என்று கூறிய  சச்சின் டெண்டுல்கள் இதன் காரணமாக ஆட்டத்தின் போக்கு மாறியதால்,  மும்பை வெற்றியை ருசித்தது என்று கூறி உள்ளார்.

இந்த ஆண்டுக்கனான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று ஐதராபாத் ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

முதலில் பந்து வீசிய சிஎஸ்கே பவுலர்கள் அசத்தலாக பந்து வீசி 149 ரன்னில் மும்பையை மடக்கினர். ஆனால், அதையடுத்து மட்டையுடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் வாட்சன் டுபிளசிஸ் தவிர மற்றவர்கள் தங்களது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதுபோல சின்ன தல என்று அழைக்கப்படும் ரெய்னாவின் ஆட்டம், அவர் பந்துகளை வீணாக்கி வந்தது சிஎஸ்கே ரசிகர்களுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது.

கடைசி ஓவர் வரை பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது. 150 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய சென்னை  சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு  148 ரன்கள் சேர்த்து தோல்வியை தழுவியது.

இது சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமே ஆட்டத்தை ரசித்துக்கொண்டிருந்த ஏராளமான ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, ஆட்டம் முடிவடைந்த பிறகு போட்டி வர்ணணையாளர்களிடம் பேசிய சச்சின் டெண்டுல்கர்,  “டோனி ரன் அவுட் ஆனதுதான் ஆட்டத்தின் முக்கிய தருணம் என்று கூறினார்.

சிஎஸ்கே ரசிகர்கள் தோனி தனது அதிரடியா காட்டுவார் என எதிர்பார்த்த நிலையில், அவரும் சில பந்துகளை வீணாக்கிய நிலையில், கடைசியில் ரன்அவுட்டாகி வெளியேறினார்.  ஆட்டத்தின் 13-வது ஓவரில் டோனி, 8 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே சேர்த்து இருந்த நிலையில், இஷான் கிஷான் வீசிய நேரடி த்ரோவில் டோனி, ரன் அவுட் ஆனார்.

ரன்அவுட் தொடர்பான ரீப்ளேவின், ஒரு கோணத்தில் டோனி, கிரீசுக்குள் பேட்டை வைத்தது போலவும், இன்னொரு கோணத்தில் கீரிசை எட்டும் முன் பந்தை ஸ்டம்பை தாக்கியது போலவும் தெரிந்த தால், இந்த ரன் அவுட் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை  ஏற்படுத்தியது. ஆனால் 3வது அம்பையர் தோனி ரன் அவுட் என அறிவித்தார். சமூக வலைத்தளங்களில் டோனியின் ரசிகர்கள் நடுவர்களை வசைபாடுவதையும் காண முடிந்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தோனி ரன்அவுட் ஆனதே ஆட்டத்தின் முக்கிய தருணம் என்று கூறிய டெண்டுல்கர், அதன்பிறகே ஆட்டத்தில் திருப்பம் ஏற்பட்டதாக தெரிவித்தார். மேலும், இறுதியில் மலிங்காவின் ஓவரை வாட்சன் பவுண்டரிக்கு விளாக, அதை விமர்சித்த டெண்டுல்கர், அதைத்தொடர்ந்து பந்து வீசிய பும்ராவை பாராட்டினார். இருந்தாலும் கடைசி ஓவரில் மலிங்கா அற்புதமாக பந்து வீசியதால் மும்பை அணி வெற்றி முக்கிய பங்காக அமைந்தது என்று கூறினார்.

மேலும், ஏற்கனவே கடந்த  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இறுதி போட்டியில் 129 ரன்கள் சேர்த்த போதும் நாங்கள் எதிரணியை கட்டுப்படுத்தி வெற்றி பெற்றிருந்தோம். எனவே எங்களுக்கு நம்பிக்கை இருந்தது” என்றார்.