கொல்கத்தா:

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி கேப்டன் கோலியின் அதிரடி காரணமாக, 10 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டியின் 35-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது.  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. முதலில்  டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து பெங்களூர் அணி மட்டையுடன் களமிறங்கியது. விராட் கோலியும், பார்தீவ் பட்டேலும் களமிறங்கி னர். பார்தீவ் பட்டேல் 11 ரன்னில் வெளியேற அவரை தொடர்ந்து இறங்கிய அக்‌ஷ்தீப் நாத் 13 ரன்னிலும் அவுட்டாகினர். இந்த நிலையில் கோலிக்கு கைகொடுக்க மொயீன் அலி களமிறக்கப்பட்டார். இருவரும் இணைந்து தூள் கிளப்பினர். ஆட்டத்தை நிதானமாகவும், நேரத்தில் அதிரடியாக பந்துகளை விளாசியும் ஸ்கோர்களை உயர்த்தினார்.

மொயீன் அலி 28 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 66 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இதற்கிடையில் அரை சதத்தை தாண்டி கோலியும் தனது அதிரடி ஆட்டம் காரணமாக 100 ரன்களை எட்டி செஞ்சுரி போட்டார்.   56 பந்தில் 4 சிச்கர், 9 பவுண்டரியுடன் சதமடித்து 100 ரன்னில் வெளியேறினார்.  இது ஐபிஎல் போட்டியில் அவர் போட்ட 5வது செஞ்சுரி என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.

214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின், சுனில் நரேன்  களமிறங்கினர். கிறிஸ் லின் வந்த வேகத்திலேயே ஒரு ரன்னில் அவுட்டாகி வெளியேற, சுனில் நரேன் 18 ரன்னிலும், ஷுப்மான் கில், ராபின் உத்தப்பா ஆகியோர் 9  ரன்னிலும் அவுட்டாகினர்.

நிதிஷ் ரானாவுடன் ஆண்ட்ரு ரசல் ஜோடி  பெங்களூர் அணி பந்து வீச்சை நாலாபுறமும் அடித்து விளாசியது. பந்துகள் அனைத்தும் சிக்சராகவும், பண்டரியாகவும் பறந்தது. இதனால் ரசிகர்களிடையே கோலியின் முயற்சி தோற்றுவிடுமோ என்று எண்ணத்தொடங்கியது.

இந்த நிலையில்,  நிதிஷ் ரானா ,  ஆண்ட்ரு ரசல் அதிரடியாக ஆடி அரை சதத்தை கடந்தனர்.  இதைத்தொடர்ந்து ஆண்ட்ரு ரசல் அவுட்டாகி வெளியேறினார்.  அவர் 25 பந்தில் 65 ரன் குவித்து ஆட்டமிழந்தார். நிதிஷ் ரானா 46 பந்தில் 85 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார்.

இறுதியில் கொல்கத்தா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக  பெங்களூர் அணி 10 ரன் வித்தியாசத்தில் வென்றது.

இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக விராட்கோலி தேர்ந்தெடுக்கப்பட்டார்.