ஐபிஎல்2019: சிஎஸ்கேவின் பந்துவீச்சில் 108 ரன்னில் சுருண்ட கொல்கத்தா!

சென்னை, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 23வது லீக் போட்டி இன்று  சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது.

மிகவும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற  இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணி வீரர்களின் அதிரடி பந்து வீச்சில் கொல்கத்தா வீரர்கள் மளமளவென வெளியேற  108 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இன்றைய  கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின், சுனில் நரேன் ஆகியோர் களமிறங்கினர்.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே சென்னை அணி வீரர்கள் மிரட்டலாக பந்துவீச்சை தொடங்கினர். . கிறிஸ்லின் சாஹரின் பந்து வீச்சில் ரன் ஏதும் எடுக்காமல் எல்பிடபிள்யு ஆகி வெளியேறினார்.  அதைத்தொடர்ந்து சுனில் நரேனும் 6 ரன்னில் வெளியேற ராபின் உத்தப்பா களமிறங்கினார். இவர் விளையாடுவார் என எதிர்பார்த்த நிலையில், அவரும், 11 ரன்னில் வெளியேற தொடர்ந்து இறங்கிய தினேஷ் கார்த்திக்கும் 19 ரன்னில் அவுட் ஆனார்.

கொல்கத்தா வீரர்கள் தொடர்ந்து ஒற்றை இலக்க ரன்னில்  ஒவ்வொருவராக வெளியேற சென்னை ரசிகர்கள் விசில் அடித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வந்தனர். இறுதியில், கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்துள்ளது.‘

ஆண்ட்ரு ரசல் மட்டும் ஓரளவு ஆடி அணியின் ஸ்கோரை 100ஐ தாண்டினார். அவர் அரை சதம் எடுத்திருந்த நிலையில்,  ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சென்னை அணி சார்பில் தீபக் சாஹர் 3 விக்கெட் எடுத்து அசத்தினார். கடந்த போட்டியின் போது, இறுதி ஓவரில் தொடர்ந்து 2 நோபால் வீசியதால் தோனியின் கோபத்துக்கு ஆளான நிலையில், இன்றைய போட்டியில் ஆக்ரோஷமாக பந்துகளை வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து சிஎஸ்கே அணிக்கு 109 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.