துபாய்: நடப்புச் சாம்பியன் மும்பை – சென்னை அணிகளுக்கு இடையே நடைபெற்ற 13வது ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது சென்னை அணி.

கடந்த ஐபிஎல் தொடரில், இறுதிப்போட்டியின் முடிவில் மும்பை அணி வின்னராகவும், சென்னை அணி ரன்னராகவும் இருந்தது கவனிக்கத்தக்கது.

டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பந்துவீச முடிவெடுத்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணியில், துவக்க வீரரும் கேப்டனுமான ரோகித் ஷர்மா, 10 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே அடித்து அவுட்டானார்.

குவின்டன் டி காக் 33(20 பந்து) ரன்களும், செளராப் திவாரி 42(31 பந்து) ரன்களும், பொல்லார்டு 18 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 17 ரன்களும் அடித்தனர்.

இறுதியில், 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை எடுத்தது மும்பை அணி.

சென்னை அணி தரப்பில், லுங்கி நிடி 3 விக்கெட்டுகளையும், தீபக் சஹார் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் களமிறங்கிய சென்னை அணியில், பாஃப் டூ பிளெசிஸ் 58 ரன்களும்(44 பந்து), அம்பாதி ராயுடு 71(48 பந்து) ரன்களும்,சோம் குர்ரன் 18 ரன்களும் அடிக்க, 19.2 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை எடுத்து வென்றது சென்னை அணி.

இதன்மூலம், தனது ஐபிஎல் பயணத்தை வெற்றியுடன் துவக்கியுள்ளது சென்னை அணி.