மும்பை:
சென்னை சூப்பர் கிங்க்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு 12லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

14வது ஐபில் டி20 தொடர் ஏப்ரல் 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டத்தின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டது. ஏப்ரல் 10ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 188 ரன்கள் குவிந்தது. நீண்ட நாள்களுக்கு பிறகு கம்பேக் கொடுத்த ரெய்னா சிக்ஸர்களை விளாசி அதிரடி காட்ட கேப்டன் மகேந்திர சிங் தோனி டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். இருந்தாலும் பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டத்தினால் சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களை எடுத்தது.

தொடர்ந்து 189 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 8 பந்துகள் மீதமிருக்க 190 ரன்களை குவித்து வெற்றிப்பெற்றது. இந்த போட்டியில் முதல் முறையாக டெல்லி அணிக்கு இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கேப்டனாக பொறுப்பு ஏற்றிருந்த நிலையில் அந்த அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணியை வீழ்த்தியது. ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்திலேயே சென்னை அணி தோல்வியை தழுவ, நேரத்தில் கேப்டன் தோனிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை அணிக்கு ஐபிஎல் நிர்வாகம் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சீசனில் இது முதல்தடவை என்பதால் தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்ந்தால் ஒரிரு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.