சென்னை:

மிழக காவல்துறை ஐபிஎல் போட்டியின்போது பாதுகாப்பு வழங்க முடியாது என்று கூறி உள்ளதாக ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கூறி உள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக பல்வேறு வகையான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என போராட்டக்குழுவினர் ஐபிஎல் நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால், திட்டமிட்டப்படி அனைத்து போட்டிகளும்  சென்னையில் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா உறுதிப்பட தெரிவித்தார்.

அதன்படி ஐபிஎல் போட்டி நடைபெற ஏதுவாக  4000 போலீசார்  5 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  மற்றும் வீரர்கள் தங்கியிருந்த விடுதி களுக்கும் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மைதானத்திற்குள், ரசிகர்கள்  செல்ல கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் நேற்று மாலை ஐபிஎல் போட்டிக்கு எதிராக  சென்னையில் பல்வேறு அமைப்பினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினார். இதன் காரணமாக தடியடியும் நடைபெற்றது. மைதானம் சுற்றி உள்ள பகுதிகள் களேபரமாக காணப்பட்டது.

இதற்கிடையில்  சென்னையில் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா மத்திய உள்துறை செயலாளரை சந்தித்தும் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியை காண சென்ற ரசிகர்கள் சிலர் மைதானத்திற்குள் ஷூ மற்றும் செருப்புகள், பனியன்களை வீசி எதிர்ப்புகளை பதிவு செய்தனர். இது வீரர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்தக் கூடாது என்று  எதிர்ப்பு வலுத்துள்ளது.

இதையடுத்து டில்லியில்  ஐசிசிஐ, பிசிசிஐ நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அதைத்தொடர்ந்து சென்னையில் நடைபெற இருந்த 6 போட்டிகளும் கேரளாவுக்கு மாற்ற முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

தமிழகத்தில் காவிரி போராட்டம் வலுத்து வரும் நிலையில், ஐபிஎல் போட்டிக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளதாக ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.