.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

முன்னாள் சாம்பியனான சென்னை அணி 7 ஆட்டத்தில் ஆடி 5 வெற்றி, 2 தோல்வி (பஞ்சாப், மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில்) கண்டிருக்கிறது.  முந்தைய லீக் ஆட்டத்தில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் மிக மோசமான தோல்வி கண்டது.  இத் தோல்வியிலிருந்து  இருந்து மீண்டுவர வேண்டிய நெருக்கடி சென்னை அணிக்கு இருக்கிறது.

சென்னை அணியின் பேட்டிங்கில் ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, சுரேஷ்ரெய்னா, தோனி ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்து வீச்சில் ஹர்பஜன்சிங், வெய்ன் பிராவோ சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆனால் கடந்த ஆட்டத்தில் ஷர்துல் தாகூர் பந்து வீச்சு எடுபடவில்லை. தீபக் சாஹர் காயம் காரணமாக அடுத்த 2 வாரம் விளையாட முடியாத நிலை. ஆகவே சென்னை அணியில் மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கரண்ஷர்மா களம் காணலாம் என்று கூறப்படுகிறது.

டில்லி அணி 7 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி (மும்பை, கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில்), 5 தோல்வியுடன் பின்தங்கி இருக்கிறது. புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பேற்ற முதல் ஆட்டத்திலேயே டில்லி அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வென்றது.  அந்த நம்பிக்கையுடன் டில்லி அணி இந்த ஆட்டத்தில் களம் காண இருக்கிறது.

டில்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் அடுத்தடுத்து அரை சதம் அடித்து நல்ல பார்மில் உள்ளார். பிரித்வி ஷா, ரிஷாப் பான்ட், மேக்ஸ்வெல், காலின் முன்ரோ ஆகியோரும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுகின்றனர். கேப்டன் பதவியில் இருந்து விலகிய சீனியர் வீரர் கம்பீர் கடந்த போட்டியில் ஆடவில்லை. அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவாரா என்பது சந்தேகமே. பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட் (11 விக்கெட்டுகள்), ராகுல் திவேதியா (6 விக்கெட்) சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

முந்தைய தோல்வியை மறந்து வெற்றிப்பாதைக்கு திரும்ப சென்னை அணி முனைப்புடன் விளையாடும்.  அதேநேரத்தில் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க வெற்றி பெற வேண்டியது அவசியமானது என்பதால் டில்லி அணியும் தீவிரம் காட்டும்.

இந்த சீசனில் இரு அணிகளும் சந்திப்பது இதுவே முதல்முறை.  ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 16 முறை நேருக்கு நேர் மோதியதில் சென்னை அணி 11 முறையும், டில்லி அணி 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்புகிறது.