கொரோனா வைரஸ் அச்சத்தால் ஐபிஎல் போட்டிகள் பாதிப்பா?

டில்லி

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐபிஎல் போட்டிகள் பெருமளவில் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

உலகெங்கும் உள்ள மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் உள்ளது.  இதுவரை சுமார் 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 17 பேர் வெளிநாட்டவர் எனவும் தகவல்கள்  தெரிவிக்கின்றன.   இதனால்  வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்குள் வர அளிக்கப்பட்ட விச வரும் ஏப்ரல் மாதம் 15 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர்களின் மிக அபிமான போட்டிகளான ஐபிஎல் போட்டிகளில் உள்ள அனைத்து அணிகளிலும் வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.  அரசின் விசா ரத்து நடவடிக்கையால் அவர்களால் ஏப்ரல் 15 வரை இந்தியாவுக்கு வந்து போட்டிகளில் கலந்துக் கொள்ள முடியாத நிலை உள்ளது.

மேலும் அதிக அளவில் மக்கள் கூட்டம் கூடாது என்பதால் ரசிகர்கள் வருகையும் சந்தேகமாக உள்ளது.

இந்நிலையில் பிசிசிஐ வெளிநாட்டு வீரர்களை பிசினஸ் ஸ்போர்ட்ஸ் விசாவில் வரவழைக்க முயற்சிகள் செய்து வருவதாகத் தெரிய வந்துள்ளது.  ஆகவே இது குறித்த முழுத்தகவல்கள் ஐபிஎல் நிர்வாகக் குழுவின் கூட்டத்துக்குப் பிறகு கிடைக்கும் எனச் சொல்லப்படுகிறது.

பிசிசிஐ தனது அதிகார டிவிட்டர் பக்கத்தில் லக்னோ, கொல்கத்தா ஆகிய நகரங்களில் நடக்க உள்ள ஒரு நாள் போட்டிகள் காலியான மைதானத்தில் நடைபெறும் எனப் பதிவு இட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.