ஐபில்: பெங்களூருவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்

 

IPL : Punjab beat Bangalore by 8 wickets

இந்தூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. 10 வது ஐபிஎல் தொடர் லீக் போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தூரில் திங்கள் கிழமை நடைபெற்ற எட்டாவது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

காயம் காரணமாக கோஹ்லி மூன்றாவது போட்டியிலும் களமிறங்கவில்லை.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் தற்காலிக கேப்டன் வாட்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக வாட்சன், விஷ்ணு ஆகியோர் களம் இறங்கினார்கள். வாட்சன் 1 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினார். விஷ்ணு வினோத் 7 ரன்னில் வெளியேறினார். பின்னர் வந்த கேதர் ஜாதவ் (1), மந்தீப் சிங் (28) எடுத்த நிலையில் பெவுலியன் திரும்பினர். டி வில்லியர்ஸ் மட்டும் நிலைத்து நின்று ஆடி 46 பந்தில் 3 பவுண்டரி, 9 சிக்சருடன் 89 ரன்கள் குவித்தார். பின்னி 18 ரன்கள் சேர்த்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14.3 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆம்லா 58 ரன்களும், மேக்ஸ்வெல் 44 ரன்களும் எடுத்தனர்.