புதுடெல்லி: 2021 ஐபிஎல் தொடர் ரத்துசெய்யப்பட்டதையடுத்து, பல இங்கிலாந்து வீரர்கள், உடனடியாக நாடு திரும்பிவிட்டனர். அதேசமயம், ஆஸ்திரேலியர்களுக்கு வேறு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

பேர்ஸ்டோ, ஜாஸ் பட்லர், சாம் பில்லிங்ஸ், கிறிஸ் வோக்ஸ், மொயின் அலி, ஜேஸன் ராய், சாம் கர்ரன், டாம் கர்ரன் ஆகியோர், உடனடியாக இங்கிலாந்து திரும்பிவிட்டனர். அதேசமயம், இயன் மோர்கன், டேவிட் மாலன், கிறிஸ் ஜோர்டான் ஆகியோர், அடுத்த 48 மணிநேரத்தில் இங்கிலாந்திற்கு புறப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியர்களைப் பொறுத்தவரை, மொத்தம் 38 நபர்கள்(விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள், மீடியா நபர்கள் உள்ளிட்டோர்) இந்தியாவில் உள்ளனர். ஆனால், இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு, ஆஸ்திரேலிய அரசு விதித்துள்ள தடையால், இவர்கள் உடடினயாக தங்கள் நாட்டிற்கு திரும்ப முடியாத நிலை உள்ளது.

அதேசமயம், அவர்களை முதலில் இந்தியாவிலிருந்து வெளியேற்றுவதற்கான திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர்கள் மாலத்தீவுகள் மற்றும் இலங்கைக்கு அனுப்பி வைத்து, அதன்பிறகு, அங்கிருந்து சில நாட்கள் கழித்து அவர்கள் ஆஸ்திரேலியா செல்லக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்த மைக் ஹசி, கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதால், அவர் குறிப்பிட்ட காலம் சென்னையிலேயே தனிமைப்படுத்திக் கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆஸ்திரேலியர்கள் & இங்கிலாந்து நாட்டவர்கள் மட்டுமின்றி, ஐபிஎல் தொடரில் இடம்பெற்ற அனைத்து நாட்டவர்களையும், பாதுகாப்பாக அவர்களின் தாயகத்திற்கு திருப்பியனுப்புவதற்கு ஏற்பாடு செய்வதே தமது முதல் வேலை என தெரிவித்துள்ளது பிசிசிஐ.

அதேசமயம், ரத்துசெய்யப்பட்ட ஐபிஎல் தொடர், இந்தாண்டிற்குள்ளேயே திருப்பி நடத்தப்படுமா? என்பது குறித்து கேட்டதற்கு, பதிலளிக்க மறுத்துவிட்டது.