ஐபிஎல்2019: வார்னர் அதிரடியால் ஐதராபாத் 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஐதராபாத்:

தராபாத் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் வார்னர், ரஷித் அதிரடியால்  ஐதராபாத் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில்வ அபார வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். தொடரின் 48வது லீக் போட்டி நேற்று  ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. ‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன் காரணமாக மட்டையுடன் களமிறங்கியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், விருத்திமான் சஹா ஆகியோர் களம் இறங்கினார்கள்.

இந்த ஆட்டத்தை முடித்துவிட்டு  நாடு திரும்பும் டேவிட் வார்னர், வந்த வேகத்திலேயே தனது அதிரடி சாகசங்களை காண்பிக்க ஆரம்பித்தார்.  முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகள் அடித்து அதிரடியாக ரன் கணக்கை தொடங்கினார். விருத்திமான் சஹாவும் பஞ்சாப் பவுலர்களின்  பந்தை நாலாபுறமும் தூக்கி அடித்தார்.

முதல் 6 ஓவரிலேயே ஐதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் குவித்தது. 6.2 ஓவர்களில் 78 ரன்னாக இருந்த போது விருத்திமான் சஹா 13 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அஸ்வின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் சிம்ரன் சிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

தொடர்ந்து களமிறங்கிய மணிஷ் பாண்டே நிதானமான  ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியின் ஸ்கோர் 9.4 ஓவர்களில் அந்த அணி 100ஐ தாண்டியது.  அதைத்தொடர்ந்து டேவிட் வார்னர் மீண்டும் தனது ருத்ர தாண்டவத்தை ஆடத்தொடங்கினார். அவர் 38 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். அணியின் ஸ்கோர் 15.3 ஓவர்களில் 160 ரன்னாக உயர்ந்த போது மனிஷ் பாண்டே (36 ரன், 25 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆர்.அஸ்வின் பந்து வீச்சில் முகமது ஷமியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அதே ஓவரில் டேவிட் வார்னர் விக்கெட்டையும் ஆர்.அஸ்வின் கைப்பற்றினார்.

டேவிட் வார்னர் 56 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 81 ரன்கள் எடுத்து முஜீப் ரகுமானிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். டேவிட் வார்னர் இந்த சீசனில் 12 ஆட்டத்தில் ஆடி ஒரு சதம், 8 அரை சதம் உள்பட 692 ரன்கள் குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை தக்க வைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து கேப்டன் கேன் வில்லியம்சன் (14 ரன்), முகமது நபி (20 ரன்), ரஷித் கான் (1 ரன்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. விஜய் சங்கர் 7 ரன்னுடனும், அபிஷேக் ஷர்மா 5 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

பஞ்சாப் அணி தரப்பில் முகமது ஷமி, ஆர்.அஸ்வின் தலா 2 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், முருகன் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இதையடுத்து  213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. 2

20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களே எடுத்தது. இதனால் ஐதராபாத் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் மட்டுமே சற்று தாக்குப்பிடித்தார். அவர்  79 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கெயில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்த்த நிலையில்,  அவர் 4 ரன்னில் வெளியேறியது சோகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து இறங்கிய மற்ற வீரர்களும் ஐதராபாத் பவுலர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் களத்தில்  சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.  ஐதராபாத் அணி தரப்பில் கலீல் அகமது, ரஷித் கான் தலா 3 விக்கெட்டும், சந்தீப் ஷர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

ஐதராபாத் அணி வீரர் டேவிட் வார்னர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

12-வது ஆட்டத்தில் ஆடிய ஐதராபாத் அணிக்கு  பெற்ற 6-வது வெற்றி இதுவாகும். பஞ்சாப் அணி சந்தித்த 7-வது தோல்வி இது. இந்த தோல்வியின் மூலம் பஞ்சாப் அணியின் அடுத்த சுற்றுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

ஏற்கனவே டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விட்டன. எஞ்சிய 2 இடங்களுக்கு 5 அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.