ஐபிஎல் 2019: ராஜஸ்தான் அணிக்கு 185 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்த பஞ்சாப் அணி

ஜெய்ப்பூர்:

பிஎல்லின் 4வது போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. முதலில் மட்டையை பிடித்த பஞ்சாப் அணி,  ராஜஸ்தான் அணிக்கு 185 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்து உள்ளது.

ஐபிஎல் 12வது சீசன் கடந்த சனிக்கிழமை தொடங்கி நடந்துவருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் நடந்துள்ளன. அவற்றில், ஆர்சிபியை வீழ்த்தி சிஎஸ்கே அணியும், சன்ரைசர்ஸை வீழ்த்தி கொல்கத்தா அணியும், மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி டெல்லி கேபிடள்ஸும் வெற்றி பெற்றுள்ளன.

4வது  போட்டி இன்று  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெற்று வருகிறது.  இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறங்கி ஆடி வருகின்றனர்.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ஆனால், ராகுல் வந்த வேகத்திலேயே 4 ரன்னுடன் வெளியேற ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருந்தாலும் கெயில் இருக்கும் தைரியத்தில் விளையாட்டை ஆர்வமுடன் ரசிக்கத் தொடங்கினர். கெய்ல் உடன் மயாங்க் அகர்வால் ஜோடி சேர்ந்தார்.

இருவரும் தொடக்கத்தில் நிதானமாகவே ஆடி வந்த நிலையில், 22 ரன் எடுத்தபோது அகர்வாலும் வெளியேறினார்.  அதைத்தொடர்ந்து கெயிலுடன் சர்பாஷ்கான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடத்தொடங்கியது.

கெயில் மீண்டும் தனது ருத்ரதாண்டவத்தை காட்டத்  தொடங்கினார்.  உனத்கட் வீசிய 12-வது ஓவரில் தொடர்ந்து 3 பவுண்டரிகளுடன், ஒரு சிக்சருடன் அடித்து 33 பந்தில் அரை சதத்தை பதிவு செய்தும்  ஆதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார்.

பென் ஸ்டோக்ஸ் 16வது ஓவரை கையிலெடுத்த நிலையில், கெயிலை வீழ்த்தும் எண்ணத்தில் அபாரமாக பந்து வீசினார். அதையும் அபாரமாக எதிர்கொண்ட கெய்ல் அந்த  ஓவரில் மட்டும், ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகள் அடித்து,  5-வது பந்தில் ஆட்டமிழந்தார்.

அவர்,. 47 பந்துக்கு 4 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்த நிலையில் மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் பஞ்சாப் அணி 15.5 ஓவரில் 144 ரன்கள் எடுத்திருந்தது.

4-வது விக்கெட்டுக்கு சர்பிராஸ் அகமது உடன் பூரன் ஜோடி சேர்ந்தார். கெய்ல் ஆட்டமிழந்ததும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஸ்கோர் அப்படியே ஸ்தம்பிக்க ஆரம்பித்தது.

19-வது ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு இரண்டு பவுண்டரிகள் கிடைத்தன. கடைசி ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். முதல் பந்தில் பூரன் 12 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து மந்தீப் சிங் களம் இறங்கினார். கடைசி பந்தை சர்பிராஸ் அகமது சிக்ஸ் அடிக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 17 ரன்கள் கிடைத்தது.

இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. சர்பிராஸ் அகமது 29 பந்தில் 46 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் அணிக்கு 185 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.