சென்னை:

பிஎல் தொடரின் குவாலிபையர்1  போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடி யத்தில் நடைபெற்றது.  இன்றைய போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சேப்பாக்கத்தில் திரண்டிருந்தனர். ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிஎஸ்கே வீரர்கள் தங்களது திறமைகளை சரியான முறையில் வெளிப்படுத்த தவறியதால்,  131 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இது சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இற்றைய குவாலிபையர் முதல் போட்டியில்   டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தொனி  பேட்டிங் தேர்வு செய்தார். இதன் காரணமாக மும்பை அணியினர் பந்துவீச்சுக்க தயாரானார்கள். சென்னையின்  தொடக்க  ஆட்டக்காரர்களாக வாட்சன், டு பிளிசிஸ் களமிறங்கினர்.

மும்பை அணியினரின் அசாத்தியமான பந்துவீச்சில் தொடக்கத்திலேயே 2 விக்கெட் அடுத்தடுத்து வீழ்ந்தது.  பவர்பிளே ஓவர்களில் சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய ரோஹித் சர்மா சென்னையின் டாப்  விக்கெட்டுகளை கைப்பற்றினார். டு பிளசிஸ் 6 ரன்னிலும், ரெய்னா 5 ரன்னிலும், வாட்சன் 10 ரன்னிலும் அவுட்டாகினர்.  இதன்மூலம், பவர்பிளே முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 32 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

தொடர்ந்து இறங்கிய முரளி விஜய்க்கு, அம்பதி ராயுடு ஒத்துழைப்பு கொடுத்தார். முரளி விஜய் 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராகுல் சஹார் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு தோனி களமிறங்கினார். ஜெயந்த் யாதவ் ஓவரில் தோனி மற்றும் ராயுடு தலா 1 சிக்ஸர் அடிக்க, சென்னை அணியின் ரன் ரேட் ஓவருக்கு 6-ஐ தொட்டது. ஆட்டம் மீண்டும் விறுவிறுப்பு அடைந்தது.

ராயுடு, தோனி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.. சென்னை ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானதால் க்ருணால் பாண்டியா, ராகுல் சஹார் ஓவரில் சிஎஸ்கே வீரர்களால்  ரன் குவிக்க முடியவில்லை. பூம்ரா வீசிய 18-வது ஓவரில் ஒரே ஒரு பவுண்டரிமட்டுமே எடுக்க முடிந்தது.

இதையடுத்து, 19-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா வீசினார். அந்த ஓவரில் தோனி இரண்டு சிக்ஸர்கள் அடிக்க ஆட்டம் அதகளமானது. தொடர்ந்து கடைசி ஓவரை வீசிய பூம்ரா முதல் பந்திலேயே தோனி விக்கெட்டை வீழ்த்தினார். ஆனால், அது நோ-பாலாக அறிவிக்கப்பட தோனிக்கு மீண்டும் வாய்ப்பு கிரடைத்தது.  இருந்தாலும் பும்ராவின் பந்து வீச்சில் தோனி, ராயுடு ரன்களை எடுக்க முடியவில்லை. இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்தது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராயுடு 37 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். தோனி ஆட்டமிழக்காமல் 29 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். மும்பை அணி சார்பில் ராகுல் சாஹர் 2 விக்கெட்டும், குருணால் பாண்டியா, ஜெயந்த் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, மும்பை அணிக்கு 132 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி.