ஐபிஎல்2019: பெங்களூரை விரட்டிய மும்பை! 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

மும்பை:

பிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் மும்பை அணி  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விரட்டியடித்து, 5 விக்கெட் வித்தியாசத்தில்  அபார வெற்றி பெற்றது.

நேற்று இரவு  மும்பை வான்கடே மைதானத்தில்  விராட் கோலி தலைமையிலான ராயல் சேலன்ஜர்ஸ் பெங்களூரு அணியும், ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில்   டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனால் பெங்களுரு அணி மட்டையுடன் களமிறங்கியது.

பெங்களூரு அணயின் தொடக்க ஆட்டக்காரர்களாக  களமிறங்கிய கோலி 8(9) ரன்களில் வெளியேற, 28(20) ரன்களுடன் பார்திவ் பட்டேலும் வெளியேறினார். இரு தலைகளும் வந்த வேகத்தில் வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை  ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய  ஏபி டி வில்லியர்ஸ், மோயின் அலி அதிரடி ஆட்டத்தின் மூலம் பெங்களுரு அணிக்கு ரன்களை குவித்தனர்.

பெங்களூரு அணியின் டிவில்லியர்ஸ் 75 ரன்களும், மொயின் அலி 50 ரன்களும் விளாசினர். 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. மலிங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது.

மும்பை அணி வீரர்கள் ஆரம்பம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆடினர். ரோகித் சர்மா 28 ரன்னும் (19 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), குயின்டான் டி காக் 40 ரன்னும் (26 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), இஷான் கிஷன் 21 ரன்னும் (9 பந்துகளில் 3 சிக்சருடன்), சூர்யகுமார் யாதவ் 29 ரன்னும் (23 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), குருணல் பாண்ட்யா 11 ரன்னும் (21 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

ஹர்திக் பாண்ட்யா 16 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 37 ரன்னும், பொல்லார்ட் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பெங்களூரு அணி தரப்பில் யுஸ்வேந்திர சாஹல், மொயீன் அலி தலா 2 விக்கெட்டும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

மும்பை அணி வீரர் மலிங்கா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

8-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி பெற்ற 5-வது வெற்றி இதுவாகும். 8-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணிக்கு இது 7-வது தோல்வியாகும்.

இந்த தோல்வியின் மூலம் பெங்களூரு அணியின் ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.

இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் 10 புள்ளிகள் பெற்றுள்ள மும்பை அணி 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.