பெங்களூரு:

நேற்று இரவு பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 7 லீக் ஆட்டத்தில் மும்பைஅணி திரில் வெற்றி பெற்று அசத்தியது. மலிங்காவின் பந்துவீச்சில் ஆர்சிபி அணி சுருண்டது.

‘டாஸ்’ ஜெயித்த பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து 187 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 188 ரன்களை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இலக்கு நிர்ணயித்தது. சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

அதைத்தொடர்ந்து மட்டையை பிடித்த கோலி அணி தங்களது சொந்த ஊரில் வெற்றியை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நிதானமாகவும், நேர்த்தியாகவும் ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் மொயீன் அலி 13 ரன்னில் ரன்அவுட்டாகி  வெளியேறி அதிர்ச்சியை  ஏற்படுத்திய நிலையில்,  தொடர்ந்து பார்த்தீவ் பட்டேல் 31 ரன்னில் வெளியேறினார்.

ஆர்சிபி கேப்டன் விராட் கோலி நின்று கலக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவரும்  46 ரன்களிலும் (32 பந்து, 6 பவுண்டரி) வெளியேற, ஹெட்மயர் 5 ரன்னிலும் வெளியேறினார்.

இந்த ஆட்டத்தின்போது, விராட் கோலி ஒட்டுமொத்த ஐ.பி.எல். போட்டியில் 5 ஆயிரம் ரன்களை எட்டிய 2-வது வீரர் என்ற சாதனையுடன் வெளியேறினார். ஏற்கனவே கடந்த போட்டியின்போது சிஎஸ்கே வீரர் முதல் வீரராக சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் டிவில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தை காட்ட, 31 பந்தில் அரைசதத்தை எட்டினார். இறுதியாக 12 பாலில் 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆட்டம் விறுவிறுப்பை எட்டியது. மும்பை வெற்றி பெறுமா, ஆர்சிபி வெற்றி பெறுமா என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க 19வது ஓவரை ஜஸ்பிரித் பும்ரா வீசத்தொடங்கினார். அவரின் பந்தில் கிரான்ட் ஹோமின் வெளியேற, அந்த 5 ஓவரில் ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதன் காரணமாக 6 பந்தில் 17 ரன்கள் தேவைப்பட்டதால்,  மும்பை அணி, தோல்வியை தழுவும் என ஒரு தரப்பு ரசிகர்கள் சோகத்துடன் இருக்க,  ஆர்சிபி ரசிகர்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற உற்சாகத்தில் ஆரவாரமாக இருந்தனர்.

இந்த பரபரப்பான சூழலில் 20வது ஓவரை பிரபல இலங்கை வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா வீச வந்தார். இதனால் மும்பை அம்போதான் என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில், அவரது முதல்பந்தை  எதிர்கொண்ட ஷிவம் துபே சிக்சர் அடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

2வது பந்தில், அவரது பந்து கேட்ச் ஆகும் சூழல் ஏற்பட்டது. ஆனால், கேட்ச் வாய்ப்பு தவறவிட்டதன் காரணமாக ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. மீதமுள்ள 4 பந்துக்களை அநாயசமாக வீசிய மலிங்கா, 3 ரன்களை மட்டுமே எடுக்க வைத்தார். இதன் காரணமாக ஆர்சிபியின் வெற்றி தடுக்கப்பட்டது.

மலிங்காவின் கடைசி ஓவர் பந்து வீச்சு, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு  வெற்றியை தேடித்தந்தது. பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் மும்பை அணி 6 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது.

டிவில்லியர்ஸ் 70 ரன்கள் (41 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தும் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது. மும்பை தரப்பில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.

மும்பை அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். பெங்களூரு அணிக்கு இது 2-வது தோல்வி.