ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை மீண்டும் கைப்பற்றியது விவோ…

சென்னை: ஐபிஎல் வீரர்களின் ஏலம் இன்று தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை  விவோ நிறுவனம் மீண்டும் கைப்பற்றி உள்ளது. 2021ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் 14வது சீசனுக்காக ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரா்கள் ஏலம் சென்னையில் இன்று பிற்பகல்2  மணி அளவில் தொடங்கி நடைபெற்ற வருகிறது. இன்றைய ஏலத்தில்,   164  இந்தியர்கள், 125  வெளிநாட்டு வீரா்கள். 3 பேர்  அசோசியேட் நாடுகளின் வீரா்கள் என  292 வீரா்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் இருந்து,  22 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 61 வீரர்களை அணிகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

தற்போதைய நிலையில், ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க உள்ள  8 அணிகளிலுமாக மொத்தம் 61 இடங்கள் காலியாக உள்ளன. அதிகபட்சமாக ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரில் 11 இடங்களும், குறைந்தபட்சமாக சன்ரைசா்ஸ் ஹைதராபாதில் 3 இடங்களும் காலியாக உள்ளன.  ஏலப்பட்டியலில் ஷாருக் கான், எம். சித்தார்த், ஹரி நிஷாந்த், சோனு யாதவ், அருண் கார்த்திக், ஜி. பெரியசாமி, பாபா அபராஜித், எம். முகமது ஆகிய 8 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்த நிலையில், இன்றைய ஏலத்தின்போது, ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை பிரபல மொபைல் நிறுவனமான விவோ மீண்டும் கைப்பற்றி உள்ளது.

விவோ நிறுவனம் ஏற்கனவே  கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின்போது, 5 ஆண்டு கால டைட்டில் ஸ்பான்சர் ஷிப்புக்காக ரூ .2,199 கோடியை செலுத்தி ஐபிஎல்நிர்வாகத்துடன் ஒப்பந்தம் போட்டது. ஆனால், கடந்த ஆண்டு  இந்தியா, சீனா துருப்புகளுக்கு இடையே லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இந்திய அரசு  சீன  நிறுவனங்களுடனான தொடர்புகளை துண்டித்ததால், விவோவும் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகியது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் விவோ ஐபிஎல் டைட்டிலை கைப்பற்றி உள்ளது.

கடந்த வருடம் ட்ரீம் 11 நிறுவனம் ஸ்பான்ஸர் செய்த நிலையில் மீண்டும் விவோ நிறுவனம் ஐபிஎல்லை வழங்குகிறது. 2021 ஐபிஎல் தொடரை விவோ நிறுவனம் ஸ்பான்ஸர் செய்கிறது.