சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர் ராவ் நியமனம்

சிபிஐயின்  இடைக்கால இயக்குநராக   நாகேஸ்வர் ராவை மத்திய அரசு நியமித்துள்ளது. இவர் தற்போது சி.பி.ஐயின் இணை இயக்குநராக உள்ளார்.

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே சமீப காலமாக பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. தொழிலதிபர் மொயின் குரேஷி தொடர்புடைய வழக்கை முடித்துத் தருவதற்கு அலோக் வர்மா 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக ராகேஷ் அஸ்தானா குற்றம்சாட்டியிருந்தார். அவர் மீது பதிலுக்கு அலோக் வர்மாவும் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். நாட்டின் மிகப் பெரிய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் உயர்பதவி வகிக்கும் இருவரும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே சிபிஐ தலைமை அலுவலகத்திலேயே சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. தவிர ராகேஷ் அஸ்தானா மீதான ஊழல் புகார் தொடர்பாக போலீஸ் துணை கண்காணிப்பாளர் தேவேந்திர குமார் கைது செய்யப்பட்டார். இவர் ஏற்கெனவே மொயின் குரேஷி தொடர்பான வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

இதற்கிடையே  அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரும் தன்னை சந்திக்கும்படி பிரதமர் மோடி சம்மன் அனுப்பினார்.

இந்நிலையில் சிபிஐயின் புதிய இயக்குநராக நாகேஸ்வர் ராவை இடைக்கால இயக்குநராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.