சென்னை:

ஐ.பி.எல். போட்டிகளுக்கு தடை விதிக்கக் கோரி ஐபிஎஸ் அதிகாரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம்,  பி.சி.சி.ஐ. மற்றும் மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2018ம் ஆண்டுக்கான  ஐபிஎல் போட்டி வரும் 7-ம் தேதி மும்பையில் தொடங்க உள்ளது. இது நாட்டின் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஐ.பி.எல். போட்டிக்கு  தடை விதிக்கக் கோரி, ஏற்கனவே நடைபெற்ற கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கி இடை நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் அவர்மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில், அவரது இடை நீக்கம் ரத்து செய்யப்பட்டு, தற்போது கியூ பிராஞ்ச் எஸ்பியாக சம்பத்குமார் ஐபிஎஸ் இந்த பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஐபிஎல் போட்டி களில் நடைபெற்றும்  சூதாட்டத்தை தடை செய்யாமல், இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளை நடத்த அனுமதி வழங்கக் கூடாது என்றும்,

கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற சூதாட்டம் தொடர்பான புகார் மற்றும் வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அணிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டது, ஆனால் சூதாட்டத்திற்கு உடமையாக இருந்த மோசடி மன்னன்  ரேடிசன் ப்ளூ ஹோட்டல் உரிமையாளர் விக்ரம் அகர்வால் உட்பட குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு இன்று தலைமை நீதிபதி இந்திரா முகர்ஜி தலைமையிலான அமர்வில்  விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அமர்வு,  மனுதாரரின் புகார் குறித்து விளக்கம் அளிக்கும்படி பி.சி.சி.ஐ. மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை  ஒத்தி வைத்தனர்.

அதைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  நாட்டில் பல சட்டங்கள் இருந்தும், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஊழல் ஒழிக்கப்பட்டுவிட்டதா? என்று கேள்வி எழுப்பினர்.