ப சிதம்பரம் முன் ஜாமீன் வழக்கு விசாரணை : பகல் 2 மணிக்கு தெரியும்

 

டில்லி

முன்னாள் அமைச்சர் ப சிதம்பரத்தின் முன் ஜாமின் வழக்கு விசாரணை பகல் 2 மணிக்கு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ என் எக்ஸ் நிறுவனத்துக்கு விதிகளை மீறி வெளிநாட்டு முதலீட்டுக்கான சலுகைகளை அளித்ததாக முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மகனும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் உதவியதாக மற்றொரு குற்றச்சாட்டு உள்ளது. கார்த்தி சிதம்பரம் தற்போது ஜாமீனில்  இருக்கிறார்.

சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்காததால் ப சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டது.  அதையொட்டி டில்லி உயர்நீதிமன்றத்தில் ப சிதம்பரம் முன் ஜாமீன் கோரி மனு செய்தார். அந்த மனு நேற்று நிராகரிக்கப்பட்டது. அதையொட்டி ப சிதம்பரத்தின் டில்லி இல்லத்துக்கு நேற்று சிபிஐ அதிகாரிகள் இருமுறை சென்றுள்ளனர்.

அவர் அங்கு இல்லாததால் அவர் வீட்டு வாயிலில் அவர் இன்னும் 2 மணி நேரத்துக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிபிஐ நோட்டிஸ் ஒட்டியது. அவர் அதன்படி வராததால் அவரைக் கைது செய்ய மீண்டும் அவர் வீட்டை சிபிஐ முற்றுகை இட்டுள்ளது.

இந்நிலையில் ப சிதம்பரம் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் டில்லி உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அதைப் பெற்றுக் கொண்ட நீதிபதி என் வி ரமணா இது குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முடிவு செய்ய வெண்டும் என கூறி உள்ளார்

தற்போது ரஞ்சன் கோகாய் அயோத்தி தொடர்பான வழக்கை விசாரித்து வருவதால் மதியம் 1 மணிக்கு மேல் அவருக்கு மனு அளிக்க முடியும்.

ப சிதம்பரம் விசாரணைக்கு வரும் போது அவரை சிபிஐ கைது செய்யக்கூடாது என வழக்கறிஞர்களில் ஒருவரான கபில் சிபல் தெரிவித்துள்ளார். அதற்கு அரசு  தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா இது ஒரு பண மோசடி வழக்கு என்பதால் கைது நடவடிக்கைகளுக்குத் தடை போட முடியாது எனத் தெரிவித்துள்ளார்

மேலும் கபில் சிபல் நேற்று இரவு சிபிஐ அளித்த நோட்டிஸில் இரண்டு மணி  நேரத்துக்குள் விசாரணைக்கு ப சிதம்பரம் ஆஜராக வேண்டும் எனத் தெரிவித்திருந்தாலும் எந்த நேரத்தில் எங்கு சிபிஐ விசாரணை நடத்த உள்ளது என்பதைச் சரியாகக் குறிப்பிடவில்லை என தெரிவித்துள்ளர்.

தற்போதைய நிலையில் மதிய உணவுக்குப் பிறகு பகல் சுமார் 2 மணி வாக்கில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் எனக் கூறப்படுகிறது.

You may have missed