டெஹ்ரான்: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, ஈரானில் 85,000 சிறைக் கைதிகள் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; விடுவிக்கப்பட்டவர்களில் 50% பேர், பாதுகாப்பு தொடர்பான கைதிகளாவர். மேலும், இவர்களுள் அரசியல் கைதிகளும் அடங்குவர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கடந்த மார்ச் 10ம் தேதி, ஈரானின் நெருக்கடி வாய்ந்த மற்றும் நோய்தொற்றும் தன்மையுள்ள சிறைகளிலிருந்து அரசியல் கைதிகளை தற்காலிகமாக விடுவிக்குமாறு ஐ.நா. அவையின் மனித உரிமைகள் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர், ஈரான் அரசைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஈரானில், கொரோனா தொற்றால் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ எண்ணிக்கை 853. மேலும், மொத்தமாக 14,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சீனா தவிர்த்து, கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரான் முக்கியமான நாடு என்பது குறிப்பிடத்தக்கது.