இஸ்தான்புல் : ஈரானிய டிவி அதிகாரி சுட்டுக் கொலை

ஸ்தான்புல்

ரான் நாட்டின் பாரசீக மொழி தொலைக்காட்சியான ஜெம் தொலைக்காட்சியின் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஈரான் நாட்டின் மிகப் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்று ஜெம் டிவி ஆகும். பாரசீக மொழி தொலைக்காட்சியான இந்த ஜெம் டிவியில் முக்கியமாக மேல்நாட்டு நிகழ்ச்சிகள் பாரசீக மொழியில் மொழி மாற்றம் (டப்பிங்) செய்யப்பட்டு ஈரான் நாட்டில் ஒளிபரப்பப்படுகின்றன.

இந்த நிகழ்ச்சிகள் இஸ்லாமிய கலாசாரத்துக்கு எதிராகவும் மேல் நாட்டு கலாசாரத்தை போற்றுவதாகவும் பல புகார்கள் எழுந்தன. இந்த தொலைக்காட்சியின் நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான சையத் கரீமியன் மீது தெகரான் நீதிமன்றத்தில் ஈரானுக்கு எதிரான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியதாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கரீமியனுக்கு ஆறு ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. அதற்கு பிறகும் அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் கடந்த மூன்று மாதங்களாக வந்துள்ளன. அதனால் அவர் இஸ்தான்புல்லை விட்டு வெளியேறி லண்டனில் வசிக்க முடிவு செய்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அவர் தனது குவைத் நாட்டை சேர்ந்த பங்குதாரருடன் ஒரு காரில் இஸ்தான்புல் நகரின் புறநகர் பகுதியில் காரில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்த சிலர் வாகனத்தை வழி மறித்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில் கரிமியன் அந்த இடத்திலேயே மரணம் அடைந்தார். அவர் பங்குதாரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.

இந்த கொலையை செய்தது யார் என இன்னும் தெரியவில்லை.