ஈராக் அஷுரா திருவிழா: கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலி
பாக்தாத்:
ஈராக்கின், கர்பலா நகரில், கர்பலா போரில் முஹம்மது நபியின் பேரர் வீரமரணம் அடைந்ததை நினைவுகூரும் வகையில் ஆஷுரா எனப்படும் ரத்தத் திருவிழா நடைபெற்றது. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரழந்துள்ளதாக தககவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் இஸ்லாமியர்களில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான முகரம் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேவேளையில் ஈராக்கில் முஹம்மது நபியின் பேரர் வீரமரணம் அடைந்ததை நினைவுகூரும் வகையில் ஆஷுரா திருவிழா நேற்று நடைபெற்றது.
முகரம் தினத்தன்று, இஸ்லாமிய சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கைகளில் கத்தி, வாள் போன்ற ஆயுதங்களை எடுத்துக்கொண்டு தங்களது உடல் மற்றும் தலையில் தாங்களே வெட்டிக்கொள்வர். இதனால் ரத்தம் பீறிட்டும், அதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் மீண்டும் மீண்டும் கத்தியால் வெட்டிக்கொள்வது வழக்கம்.
அதுபோல இந்தியாவிலும் ஷியா முஸ்லீம்கள் கத்தி மற்றும் வாள்கள் மூலம் தங்களது உடலில் வெட்டிக்கொண்டு காயப்படுத்திக்கொண்டு ஊர்வலமாக செல்வதும் வழக்கம்.
இந்த நிலையில் ஈராக்கில் நேற்று ஷியா முஸ்லீம்களின் ஆஷுரா தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக பேரணியில் சென்றவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இந்த நெரிசலில் சிக்கி 31 இஸ்லாமியர்கள் உயிரிழந்து உள்ளதாகவும், 100 – க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருப்பதாகவும் ஈராக்கில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.