ரெயில் பயணிகளுக்கு உணவு தயாரிப்பு நேரடி ஒளிபரப்பாகிறது

டில்லி

ரெயில் பயணிகளுக்கு உணவு தயாரிப்பதை நேரடி ஒளிபரப்பு செய்ய ஐஅர்சிடிசி வசதி செய்துள்ளது.

பயணிகளின் நலனுக்காக இந்திய ரெயில்வே பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.  அவ்வரிசையில் ஏற்கனவே ரெயில் பெட்டிகளில் கழிவறை மற்றும் மின்வசதி குறைபாடு இருந்தால் உடனடியாக ஆன்லைன் மூலம் புகார் அளிக்கும் வசதியை அளித்துள்ளது.   அந்த தகவல் ரெயிலில் வரும் பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டோ அல்லது அடுத்த ரெயில் நிலையப் பணியாளர்களாலோ உடனடியாக சரி செய்யப்படுகிறது.

இந்நிலையில் பயணிகளுக்கு வழங்கும் உணவு தயாரிப்பை நேரடி ஒளிபரப்பு செய்வதை நேற்று ரெயில்வே போர்ட் சேர்மன் தொடங்கி வைத்தார்.   இந்த ஒளிபரப்பு ஐஅர்சிடிசி யின் கீழ் உள்ள அனைத்து சமையல் கூடங்களில் இருந்தும் ஒளிபரப்பப் படுகிறது.    இதன் மூலம் பயணிகள் தங்களுக்கு வழங்கப்படும் உணவு சுகாதார முறையில் தயாரிப்பதை உறுதி செய்துக் கொள்ள முடியும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.