புதுடெல்லி: காப்பீடு வழங்குநர்கள், எந்த மருத்துவமனைகளுடன், பணமற்ற மருத்துவ சேவைகளை அளிக்கும் வகையில் ஏற்பாட்டை செய்திருக்கிறார்களோ, அந்தக் குறிப்பிட்ட மருத்துவமனைகள், கொரோனா உள்ளிட்ட அனைத்துவகை நோய்களுக்கும், ஒப்புக்கொண்டதைப் போலவே, பணமற்ற மருத்துவ சிகிச்சைகளை அளிப்பது கட்டாயம் என்று விளக்கமளித்துள்ளது இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம்(ஐஆர்டிஏஐ).

ஏனெனில், சில மருத்துவமனைகள், கொரோனா தொற்றுக்கு, பணமில்லாத சிகிச்சையளிக்க மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், எந்தெந்த மருத்துவமனைகள், காப்பீட்டு வழங்குநர்களுடன், எஸ்எல்ஏ எனப்படும் சேவை நிலை ஒப்பந்தத்தை கையொப்பமிட்டுள்ளனவோ, அந்த மருத்துவமனைகள் கட்டாயமாக, கொரோனா உள்ளிட்ட அனைத்துவகை நோய்களுக்கும், பணமற்ற சிகிச்சைகளை வழங்க வேண்டும்.

எனவே, பணமற்ற சிகிச்சை, தொடர்புடைய மருத்துவமனையால் மறுக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திற்கு புகாரளிக்கலாம் என்று ஐஆர்டிஏஐ விளக்கமளித்துள்ளது.