மருத்துவக் காப்பீட்டில் சேர்க்கப்பட்டது கொரோனா சிகிச்சை…. ஐஆர்டிஏஐ அறிவிப்பு

டெல்லி:

கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்திருந்தால், அவர்கள் தங்களது மருத்துவ சிகிச்சைக்கும் மருத்துவ காப்பீடு கோரலாம் என ஐஆர்டிஏஐ (Insurance Regulatory and Development Authority of India (IRDAI)  எனப்படும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

உலகநாடுகளை மிரட்டி வரும் கொரோனா தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 73 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஆயிரக்கணக்கானோர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா சிகிச்சை பெற்றுபவர்கள், ஏற்கனவே மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேர்ந்திருந்தால், இந்த மருத்துவ சிகிச்சைக்கும் காப்பீடு கோரலாம் என்று இந்திய  காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

கொரோனா சிகிச்சை – மருத்துவக் காப்பீட்டில் பலன் பெறுவதற்கான விதிமுறைகள்!

இதுதொடர்பாக இந்திய  காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்குமாறு மருத்துவக் காப்பீடு நிறுவனங்கஙளுக்கு உத்தரவிட்டு இருப்பதாக கூறி உள்ளது.  மேலும், ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதற்காக கண்காணிக்க மருத்துவமனையில் இருந்தால் கூட அதற்கான சிகிச்சைக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

மேலும், குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டுமே காப்பீட்டு தொகை வழங்கப்படும் பல மருத்துவ காப்பீடு நிறுவனங்கள் வரையறுத்துள்ள நிலையில், உடனே அதில், கொரோனா வைரஸ் பாதிப்பிற்கான சிகிச்சைக்கும் காப்பீட்டு தொகை வழங்கும் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளது.