புளோரிடா:

அமெரிக்காவை பெரும் அச்சுறுத்தி வந்த இர்மா புயல் புளோரிடாவை தாக்க துவங்கியது. சேதம் குறித்த விவரம் ஏதும் வெளியாகவில்லை. இந்த புயல், அமெரிக்க நேரப்படி காலை 7 மணி முதல் 8 மணிக்குள் புளோரிடாவை கடந்து செல்லும் என வானிலை எச்சரிக்கப்பட்டு இருந்தது.

இந்த புயல் கடக்கும்போது மணிக்கு 130 மைல் வேகத்தில் காற்று வீசும். அங்கு கனமழை பெய்து வருகிறது. புளோரிடாவை ஒட்டிய மியாமி கடற்கரை, நபேல்ஸ், ஓர்லாண்டோ , ஜேக்சன்வில்லி, மரத்தான், சரசோட்டா, டாம்பா, டோனா, நகரங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பு தேடி இடம்பெயர்ந்துள்ளனர். புயல் காரணமாக 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடல் அலைகள் 15 அடி வரை எழும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . சேதம் குறித்து முழு தகவல் இதுவரை கிடைக்கவில்லை. மீட்பு படையினர் தயார் நிலையில்உள்ளனர்.