அரசியல் களமிறங்கும் மணிப்பூர் இரும்புப் பெண் சர்மிளா

அரசு மற்றும் அதிகார வர்க்கத்தின் காதுகளில் ஏழைகள் மற்றும் பலவீனர்களின் குரல்கள் எப்போதுமே விழுவதில்லை. அது சத்யாகிரக போராட்டமாக இருந்தாலும் சரி உண்ணாவிரதப் போராட்டங்களாக இருந்தாலும் சரி!

அதனால்தான் கடந்த 16 ஆண்டுகளாக அரசுக்கு எதிராக, அப்பாவி மக்களுக்கு எதிரான அரசின் அடக்குமுறை சட்டத்துக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் ஷர்மிளாவை மத்திய அரசு (காங்கிரஸ் /பாஜக) கண்டுகொள்ளாமல் இருக்கின்றது?

தொலைக்காட்சி கேமராக்கள் அவரைச் சுற்றி வலம் வராதது ஏன்? அன்னா ஹஸாரேயும் , பாபா  ராம் தேவும் உண்ணா நோன்பு துவங்குவதாக அறிவித்த 24 மணி நேரத்துக்குள்ளேயே நாட்டின் மத்திய தர வர்க்கத்தில் பெரும்பாலோருக்கு மிகப் பரிச்சயமானோராக அவர்கள் மாறிவிட்ட நிலையில், கடந்த 16ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் ஷர்மிளாவைக் குறித்து எத்தனை சதவீதம் மக்களுக்குத் தெரியும்?

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்புச் சட்டம் (AFSPA) அமல்படுத்தப்பட்டு வருகின்றது. மணிப்பூரின் சில பகுதிகளில் அமலில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தின்கீழ், சந்தேகப்படும் எவரையும் எவ்வித விசாரணையோ ஆதாரமோ இன்றிச் சுட்டுப் பிடிக்கவோ அல்லது கைது செய்து சிறையில் அடைக்கவோ முடியும். இதனால் ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்களால் பாதிக்கப்படும் அப்பாவிகள்கூட தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க முடியாத நிலை இருந்து வருகிறது. 
கடந்த 2000ம் ஆண்டு நவம்பர் இரண்டாம் தேதி , அஸ்ஸாம் ராணுவத்தினர் இம்பால் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் 10 அப்பாவி பொதுமக்களை கொன்றுகுவித்தனர்.
இதனையடுத்து கடுமையான சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார்.

அரசு இந்த சட்டத்தினை திரும்பப் பெறும்வரை தன் வீட்டிற்குள் நுழைவதில்லை , உணவருந்தப் போவதில்லை என்றும் சபதமெடுத்தார். இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இச்சட்டத்தைத் திரும்பப்பெறக் கோரி கடந்த 16 ஆண்டுகளாக ஐரோம் ஷர்மிளா சானு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.
ஆங்கிலேயரின் அடக்குமுறை ஆட்சியினைவிடவும் மோசமான  அடக்குமுறை கொண்ட இந்தக் காட்டுமிராண்டிச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரியே ஐரோன் ஷர்மிளா கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தமது போராட்டத்தின் வடிவத்தை மாற்றிக்கொள்ள முடிவெடுத்துள்ளார்.  வருகின்ற ஆகஸ்ட் 9ம் தேதியன்று தமது  உண்ணாவிரதத்தை கைவிட்டு, அரசியலில் அடியெடுத்து வைக்கின்றார். வருகின்ற மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாக  போட்டியிடுவதென முடிவெடுத்துள்ளார்.
இவரது திடீர் முடிவு இவரின் குடும்பத்தார் மற்றும் இவரது ஆதரவாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இவரது முடிவினை காங்கிரஸ் மற்றும் பாஜக  வரவேற்றுள்ளன.