டெல்லி:

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட மாட்டாது என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் காங்வார் தெரிவித்துள்ளார்.

பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பிறகு புதிதாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மத்திய அரசு அறிமுகம் செய்தது. அப்போது முதலே 2 ஆயிரம் ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படும் என்ற பேச்சு மக்கள் மத்தியில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

ரிசர்வ் வங்கி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வழங்க மறுப்பதாக வங்கியாளர்கள் தெரிவித்தனர். இதனால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாயின. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியபோது நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பதிலளிக்க மழுப்பியது சந்தேகத்தை அதிகரித்தது

இந்நிலையில் டில்லியில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் காங்வார் கூறுகையில், ‘‘2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அது வேறு விவகாரம். ரூ.2000 நோட்டுக்களை திரும்பப் பெறும் எண்ணம் மத்திய அரசிடம் இல்லை. புதிய 200 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்தில் வர இருக்கிறது’’ என்று அவர் தெரிவித்தார்.