சென்னை,

தமிழக அரசின் நிதிநிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை 2017-18 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழக அரசின் நிதிநிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை 2017-18 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது. வளர்ச்சி என்பதை மறந்து விட்டு சிறிதும் பயனற்ற இலவசங்களை செயல்படுத்தியதும், தொலைநோக்கற்ற தன்மையும் தான் இந்நிலைக்கு காரணமாகும்.

2016-17 ஆம் ஆண்டிற்கான மாநில அரசின் சொந்த வரி வருவாய் ரூ.99,590 கோடி மட்டும் தான். அதேநேரத்தில் இலவசங்கள், மானியங்கள் ஆகியவற்றுக்கான செலவுகள் மட்டும் ரூ.72,615 கோடி ஆகும். அதாவது அரசின் சொந்த வரி வருவாயில் 73% இலவசத்திற்காகவும், மானியங்களுக்காகவும் மட்டும் செலவிடப்படுகிறது. இந்த செலவிலிருந்து தமிழகத்திற்கு ஒரு பைசா கூட லாபம் கிடைக்கப் போவதில்லை எனும் போது, இலவசங்களுக்கு 73% தொகையை செலவிடுவது அறிவார்ந்த செயலல்ல.

இப்படிக் கூறுவதால் பாட்டாளி மக்கள் கட்சி இலவசங்களுக்கு எதிரானது அல்ல. அரசின் இலவசங்கள் பயனுள்ளதாகவும், மனிதவளத்தையும், அறிவுவளத்தையும் பெருக்குவதாகவும் அமைய வேண்டும். தமிழக அரசு இப்போது வழங்கும் இலவசங்களில் கூட சில தவிர்க்க முடியாதவைதான். அவை தொடருவதில் தவறில்லை. ஆனால், மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசங்களுக்கு முக்கியத்துவம் அளித்ததால் தான் தமிழக அரசின் நிதிநிலைமை கற்பனை செய்துபார்க்க முடியாத அளவுக்கு மோசமாகி விட்டது.

நடப்பாண்டில் மட்டும் தான் இலவசங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கூற முடியாது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்தே தமிழகத்தின் பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது. 2011-12 ஆம் ஆண்டில் தமிழக அரசின் சொந்த வரிவருவாய் ரூ.59,932 கோடியாக இருந்தது. அது 5 ஆண்டுகளில், அதாவது 2016&17ஆம் ஆண்டில் ரூ.87,286 கோடியாக உயர்ந்திருக்கிறது. இது 45.64% வளர்ச்சி மட்டுமே. ஆனால், இலவசங்கள், மானியங்கள் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடு 2011-12ஆம் ஆண்டில் ரூ.29,726 கோடியாக இருந்தது. இது அடுத்த 5 ஆண்டுகளில் அதாவது 2016-17 ஆம் ஆண்டில் ரூ.68,350 கோடியாக உயர்ந்திருக்கிறது. இது 130% வளர்ச்சியாகும். அரசின் வரி வருவாய் கடந்த 5 ஆண்டுகளில் 45% மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், இலவசங்கள் மற்றும் மானியத்திற்கான செலவு 130% உயர்ந்துள்ளது. இது ஆரோக்கியமான பொருளாதாரத்தின் அடையாளமல்ல.

‘‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு’’ என்பது வள்ளுவர் வாக்கு ஆகும். அதாவது, ‘‘பொருள் வரும் வழிகளை மேன்மேலும் உயர்த்தல், வந்த பொருட்களை சேர்த்தல் மற்றும் காத்தல், காத்தவற்றை வகுத்து செலவு செய்தல் ஆகியவையே நல்ல அரசுக்கான இலக்கணங்கள் ஆகும்’’ என்பது திருக்குறள் சொல்லும் பாடமாகும். ஈட்டி சேர்த்த பொருளை வகுத்து செலவு செய்வதுதான் நல்ல அரசுக்கு அடையாளம் எனும் போது, கடன்வாங்கி இலவசங்களை வழங்கும் தமிழக அரசை எப்படி அழைப்பது என்பது தெரியவில்லை. அந்த அளவுக்கு வருவாயைப் பெருக்காமல், இலவசத்துக்கான செலவுகளை மட்டும் தமிழக அரசு ரூ.72,615 கோடி என்ற அளவுக்கு அதிகரிக்கச் செய்திருக்கிறது.

2007-08 முதல் 2012-13 வரையிலான 5 ஆண்டுகளில் தமிழகம் அடைந்த வளர்ச்சியை அபரிமிதமான வளர்ச்சி என்று கூற முடியாது. அது மிகச்சாதாரணமான வளர்ச்சி தான். எனினும், அதே அளவிலான வளர்ச்சி 2013-14 முதல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு எட்டப்பட்டிருந்தால் 2017-18 ஆம் ஆண்டில் தமிழகத்தின் சொந்த வரிவருவாய் ரூ. 1.65 லட்சம் கோடியாக அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், நடப்பாண்டின் வரி வருமானம் ரூ.99,590 கோடி மட்டுமே. ஆக, தமிழகத்தின் வருவாய் இயல்பைவிட 66,000 கோடி குறைந்துள்ளது. நிதித்துறையில் தமிழகத்தின் தோல்விக்கு இதுதான் உதாரணமாகும்.

தமிழகத்தின் வரி வருவாய் ஒரு அங்குலம் உயர்ந்தால், இலவசத்திற்கான செலவு ஒரு மீட்டர் உயருகிறது. இதேநிலை நீடித்தால் தமிழகம் விரைவில் திவாலாகிவிடும். தமிழகத்தின் வீண் செலவுகளை குறைத்து வரிவாயைப் பெருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இதற்காக, தமிழகத்தின் நிதிச் செயல்பாடுகள் குறித்து பொருளாதார வல்லுனர்கள் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். அக்குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் நிதிச்செயல்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியிருக்கிறார்.