சென்னை: தமிழக பாரதியஜனதா கட்சியில் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணா மலைக்கு துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. இது கட்சியின் மூத்த தலைவர் களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், பல மூத்த தலைவர்கள் மீண்டும் தங்களது தாய்க்கட்சிக்கு திரும்ப தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை ஐபிஎஸ், கர்நாடக மாநிலத்தில் பணியாற்றி வந்தார. இவர் சில மாதங்களுக்கு முன்பு  திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு,  சமூக வலை தளங்களில் பாஜக ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வந்தார். தமிழக கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பேசி வந்தார்.

இந்த நிலையில், ஆகஸ்டு 25ந்தேதி அன்று டெல்லி சென்ற,  பாஜக தேசியத் தலைவரான ஜே.பி.நட்டா, மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ், தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அதைத்தொடர்ந்து கோவை வந்தவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, பாஜகவை புகழ்ந்து தள்ளினார். குப்பையில் தான் தாமரையை வளர்ப்பேன் என்று பஞ்ச் டயலாக் பேசினார்.

இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், அண்ணாமலைக்கு கட்சியின் துணைத்தலைவர் பதவி வழங்கியிருப்பதாக அறிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்படுகிறார். தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே திமுகவில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமிக்கும் கட்சியின் துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது.  மேலும் மாற்று கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கும் கட்சி பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் கட்சியில் இணைந்த நாலே நாளில் அண்ணாமலைக்கும் துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ள, பாஜக நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக பாஜக தலைமையின் மீது,  பாஜகவில் உள்ள மூத்த தலைவர்களிடையே கடுமையான அதிருப்தி எழுந்துள்ளது. பல ஆண்டுகளாக தீவிரமாக கட்சிப் பணியாற்றி வரும் பல மூத்த தலைவர்கள் உள்ள  நிலையில், சமீபத்தில் கட்சியில் சேரும்,  மாற்றுக்கட்சியினருக்கு பதவி வழங்கப்படுவது அவர்களிடையே குமுறலையும், கொந்தளிப்பையும்  ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், தனது மனக்குமுறலை வெளிப்படையாக தெரிவித்திருந்த நிலையில், பல மூத்த நிர்வாகிகள், தமிழக பாஜக தலைமை மீது கடும் அதிருப்தி யில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தி தலைவர்கள் ஒன்றுகூடி விவாதித்து, விரைவில் தங்களது தாய்க்கட்சி திரும்ப உள்ளதாக தாமரை கட்சி வட்டாரத்தில் இருந்து  தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழகத்தில் பாஜகவுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி, தமிழக சட்டமன்றத்தில் பாஜக இடம் பிடிக்கும் என சமீபகாலமாக உதார் விட்டுவரும், தமிழக  பாஜக மாநித்தலைவர்  முருகனுக்கு இந்த தகவல்கள் கிலியை ஏற்படுத்தி உள்ளது.