இ சிகரெட் முதல் ஆபாசப்படம் வரை : தடை செய்வது மட்டுமே தீர்வாகுமா?

டில்லி

ரசு தடை செய்யும் பல பொருட்கள் கள்ளச்சந்தைகளில் தாராளமாகக் கிடைத்து வருகின்றன என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

புகைப்பிடிப்பதை தடுக்க இ சிகரெட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.   ஆனால் உண்மையில் வழக்கமான சிகரெட்டுக்களுக்கு பதில் இ சிகரெட்டுகள் பழக்கம் அதிகரித்துள்ளது.   இத்தகைய சிகரெட்டுகள் மூலமும் நிகோட்டின் உள்ளே செல்கின்றன.   இது புகைப் பழக்கத்துக்கு என கூறப்பட்டாலும் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கின்றன எனப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.    இதையொட்டி சமீபத்தில் மத்திய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இ சிகரெட்டுகள் விற்பனைக்குத் தடை விதித்து உத்தரவிட்டார்.

இவ்வாறு அரசு தடை விதிப்பது முதல் முறை அல்ல.  ஏற்கனவே ஆபாசப்படங்கள் முதல் குட்கா வரை அனைத்தும் தடை செய்யப்பட்டவை ஆகும்.    இத்தகைய நடவடிக்கைகள் அரசின் சரியான முடிவு என்பதில் பலருக்கும் ஐயமில்லை.   ஆனால் அதே வேளையில் இந்த பொருட்கள் அனைத்தும் உடல்நலத்துக்கு கேடு விளைவிப்பவை என்பதை அரசு சரியான முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மக்களுக்கு கேடு என அறிவிக்கப்படும் எவ்வகைப் பொருளையும் குறித்து அரசு விளக்கம் ஏதும் அளிக்காமல் உள்ளது.   சொல்லப்போனால் அரசுக்குத் தெரிந்த ஒரே தீர்வு விற்பனைத் தடை என்பது மட்டுமே ஆகும்.    அந்தப் பொருள் கிடைக்காமல் தடுப்பது  அதாவது உற்பத்தியை அடியோடு ஒழிப்பது போன்றவை குறித்த நடவடிக்கை எதுவும் அரசு முழுமையாக எடுப்பது இல்லை.   இதனால் அத்தகைய பொருட்கள் கள்ளச் சந்தையில் தாராளமாகக் கிடைத்து வருகின்றன.

ஒரு சில நேரங்களில் இந்த தடைகளை மீற அரசும் உதவி வருகின்றன எனச் சொல்ல முடியும்.   குறிப்பாக நெடுஞ்சாலைகளில் மது விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் தடை செய்தது.   அதையொட்டி பல மதுக்கடைகள் மூடப்பட்டன     ஆனால் அந்த நெடுஞ்சாலைகளை மாவட்ட மற்றும் உள்ளூர் சாலைகளாக அரசு மாற்றியதால் அந்த மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.   ஒரு வகையில் சட்ட மீறலுக்கு அரசு உதவி உள்ளது எனக் கூறலாம்.

எந்த ஒரு தடை செய்யப்பட்ட பொருளும் எங்கும் கிடைக்க இயலாத அளவுக்கு அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்   அவ்வாறின்றி விற்பனைத் தடை மட்டும்  செய்வதால்  பகிரங்கமாக விற்பனை ஆகும் இப்பொருட்கள் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை ஆகின்றன.    எனவே அரசு விற்பனைத தடை செய்வது மட்டும் அந்த  பொருட்களை அடியோடு ஒழித்து விடும் எனச் சொல்ல முடியாது எனப்  பல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.