சென்னை:

மிழகத்தில் அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக எம்பி. தம்பித்துரை மோடி அரசுக்கு எதிராக கடுமையாக சாடி வரும் நிலையில், ஆளும் அதிமுக அரசோ பாஜகவுடன் மென்மையான போக்கையே கடைபிடித்து வருகிறது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தமிழகத்தில் அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இரண்டு கட்சிக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லை. அதனால் ஒருவர் மீது ஒருவர் பழி சொல்ல கூடாது என்று கூறினார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார். அவர்தான் இத்தனை ஆண்டுகளாக எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை நிறைவேற்றி வைத்துக் கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டுக்கு குறைவின்றி திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்துகிறது என்றவர்,  திருச்சி மற்றும் ஆவடியில் உள்ள பொதுத்துறை, பாதுகாப்பு துறை நிறுவனங்களை மூடும் திட்டம் இல்லை. தமிழகத்திற்கு பாஜக நிறைய நலத்திட்டங்கள் கொண்டு வருகிறது, என்றும் தெரிவித்தார்.

நேற்று திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிர்மலா,  ‘திருச்சி வளர்ச்சிக்கு ராணுவ நிலம் ஒதுக்குவது தொடர்பாக 2 ஆண்டாக பேசி வருகிறேன். ராணுவம் தரும் இடத்துக்கு மாற்றாக வேறு நல்ல இடங்களை வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்கிறேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. திருச்சியில் இல்லாவிட்டால், தமிழகத்தில் எங்கும் தரலாம்’ என்று கோரிக்கை விடுத்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய, எம்பி குமார், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர்,  இருவரும், திருச்சிக்கு பதிலாக  காஞ்சிபுரம் அருகே  நிலத்தை ஒதுக்கி தமிழக அரசு அறிவித்துள் ளது. அது தொடர்பான ஆவனங்களை  பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி 6 மாதம் கடந்துவிட்டது என்று கூறினர். இது சலசலப்பை ஏற்படுத்தியது. அதைத் சமாளித்துக்கொண்டு பேசிய நிர்மலா சீதாராமன்,  ‘எனக்கு இதுவரை எந்த தகவலும் வரவில்லை’ என கூறினார்.

இந்த நிலையில், இன்று அதிமுக பாஜக இணைந்து செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

சமீபகாலமாக பாஜகவுக்கு எதிராக செயல்பட்டு வரும் அதிமுக எம்பியான தம்பிதுரை, ரஃபேல் போர் விமானம் 10 சதவிகித இடஒதுக்கீடு போன்றவற்றில் பாஜகவை கடுமையாக சாடினார். மேலும் பாஜகவுக்கு அடிமையாக இருக்க அதிமுக விரும்பாது என்றும் கூறி சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார். இதற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, தம்பிதுரை மீது கடுமையாக சாடியிருந்தார்.

இந்த நிலையில் நிர்மலா சீத்தாராமனின் இன்றைய ஒற்றுமை குறித்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.