பெங்களூரு :

எதிர்க்கட்சிகள் கூட்டணி வைத்தால் அது கலப்பட கூட்டணி. பீகாரில் நிதிஷ்குமாருடன் பாஜக வைத்திருக்கும் கூட்டணி பரிசுத்தமான கூட்டணியா? என பிரதமர் மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடக முதல்வரும் மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான எச்டி குமாரசாமி என்டிடிவிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

விவசாயக் கடனை தள்ளுபடி செய்வோம் என உத்தரபிரதேசத்தில் பாஜக வாக்குறுதி அளித்தது. ஆனால் இதை நிறைவேற்றவில்லை.

மேலும் வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு
தருவதாக பாஜக அரசு வாக்குறுதி அளித்ததும்நிறைவேற்றப்படவில்லை.

பிரதமர் மோடியின் ஐந்து ஆண்டுகால சாதனைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கடந்த காலத்தில் கூட்டணி ஆட்சிக்கு தலைமை தாங்கிய பிரதமர்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்

எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியை கலப்படம் என்று பிரதமர் மோடி கூறுகிறார். நாங்கள் கலப்படக் கூட்டணி என்றால், பீகாரில் நிதிஷ்குமாருடன் நீங்கள் வைத்திருப்பது புனித கூட்டணியா?

கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டுகள் வரை நல்ல ஆட்சியை தந்ததற்கான சான்றுகள் உள்ளன.

முன்னாள் பிரதமர்களான நரசிம்ம ராவும் மன்மோகன் சிங்கும், நாட்டு வளர்ச்சிக்காக எவ்வளவு பாடுபட்டார்கள் என்பது நமக்கு தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.