கொழும்பு

லங்கையில் ஆட்சி அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப் தெரிவித்ததற்கு இலங்கை பதில் அளித்துள்ளது.

சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசிய திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார்  தேப், “இந்தியா முழுவதும் பாஜக விரைவில் ஆட்சி அமைக்கும்.  வரும் தேர்தலில் கேரளா, தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி மலர உள்ளது.  அதன் பிறகு அண்டை நாடுகளான இலங்கை மற்றும் நேபாளத்திலும் பாஜக ஆட்சியை அமைக்க பாஜக தலைவர் அமித்ஷா திட்டமிட்டுள்ளார்.” என உரையாற்றினார்.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் அளித்தன.   நாட்டில் உள்ள எந்த ஒரு கட்சியும் மற்றொரு நாட்டில் ஆட்சி அமைப்பது அந்நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகும்.   எந்த நாட்டு அரசியலமைப்பு சட்டத்திலும் அதற்கான வழிவகைகள் கிடையாது எனவும் பல தலைவர்கள் கூறி உள்ளனர்.  பொதுமக்களிடையே தேப் பேசியது மிகவும் நகைச்சுவையாக கருதப்பட்டுக் கிண்டல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இலங்கை தேர்தல் ஆணையம், ”இலங்கையின் எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது குழுக்களோ வெளிநாட்டில் உள்ள மற்றொரு கட்சி அல்லது குழுக்களுடன் தொடர்பு வைத்திருக்கக் கூடாது.   ஆனால் இலங்கையின் தேர்தல் விதிமுறைகளின் படி வெளிநாட்டுக் கட்சிகள் இங்குள்ள கட்சிகளுக்காகப் பணி புரிய மட்டும் அனுமதிக்கப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளது.