கொல்கத்தா: எப்போதும் பாகிஸ்தானைப் பற்றி மட்டுமே பேசிவரும் பாரதீய ஜனதா, அந்நாட்டின் விளம்பரத் தூதராக செயல்படுகிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

மேற்குவங்க சட்டசபையில், சிஏஏ-க்கு எதிரான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து பேசிய மம்தா பானர்ஜி, “மத்திய பாரதீய ஜனதா அரசு எப்போதுமே பாகிஸ்தான் பற்றியே பேசி வருகிறது.

சிஏஏ -வுக்கு எதிரான போராட்டத்தை பெரும்பான்மை இந்துக்களும் எதிர்க்கிறார்கள். அந்த சகோதரர்களுக்கு எனது நன்றிகள். மேற்குவங்கத்தில் சிஏஏஇ என்ஆர்சி மற்றும் என்பிஆர் ஆகியவற்றை அனுமதிக்கமாட்டோம்.

எங்களின் எதிர்ப்புப் போராட்டம் அமைதியான முறையில் நடைபெறும். இச்சட்டத்தின் மூலம் வெளிநாட்டவர்களை இந்தியக் குடிமக்களாக மாற்றிக்கொள்ளலாம் என்பது ஏற்க முடியாத ஒன்று. இதற்கு நாம் பலியாகக்கூடாது.

எப்போதும் பாகிஸ்தான் பற்றியே பேசும் அவர்கள், இந்தியாவைப் பற்றி பேசுவதில்லை” என்றார் மம்தா பானர்ஜி.