பரியேறும் பெருமாள்: திரையங்கு கிடைக்காததற்கு சாதி காரணமா?

ரியேறும் பெருமாள் திரைப்படம் சிறப்பாக இருப்பதாக பலரும் பாராட்டு தெரிவித்துவருகிறார்கள். ஆனால் மிகக் குறைந்த திரையரங்குகளிலேயே இப்படம் வெளியாகி இருக்கிறது.

“இப்படம் சாதி வெறி குறித்து பேசுவதால் திரையரங்குகள் கிடைக்கவில்லை” என்று ஒரு கருத்து சமூகவலைதளங்களில் பலரால் எழுதப்பட்டு வருகிறது. இது குறித்து மூத்த பத்திரிகையாளர் கே.என். சிவராமன் எழுதியுள்ள முகநூல் பதிவு:

“2014ம் ஆண்டு ‘மெட்ராஸ்’ வெளியான அதேநாள்தான் சுசீந்திரனின் ‘ஜீவா’ ரிலீசானது. ‘மெட்ராஸ்’ அளவுக்கு அரசியல் பேசிய – கிரிக்கெட் வாரியத்தில் இருக்கும் பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தை பொதுத் தளத்தில் அம்பலப்படுத்திய ‘ஜீவா’வுக்கு போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை. காரணம் ‘ஜீவா’வில் நடித்திருந்தவர் விஷ்ணு. சின்ன நடிகர்.

‘கபாலி’, ‘காலா’ வெளியானபோது வேறு எந்த சிறுப்படங்களும் ரிலீசாகாதபடி பார்த்துக் கொண்டார்கள். தப்பித்தவறி வெளியானப் படங்களுக்கு அரங்கமே கிடைக்கவில்லை.

காரணம் அவை இரண்டும் ரஜினி நடித்தப் படங்கள்.

சமீபத்தில் கூட சமந்தாவே நடித்திருந்தும் ‘யு டர்ன்’ படத்துக்கு 200 தியேட்டர்கள்தான் தமிழகத்தில் கிடைத்தன. அதுவும் ஒரு காட்சி, இரு காட்சி என. காரணம் ‘சீமராஜா’.

சாதி காரணமாக திரையரங்கு கிடைக்கவிலலை என்கிற பதிவுகளில் ஒன்று…

அவ்வளவு ஏன் விஜய் படத்துடன் விஷால் மோத முற்பட்டபோதெல்லாம் – ‘பூஜை’ உட்பட – போதுமான தியேட்டர்ஸ் கிடைக்காமல்தான் தவித்தார்.

ஷங்கர் மிகப்பெரிய டைரக்டர்தான். என்றாலும் அவர் தயாரித்த ‘ஆனந்தபுரத்து வீடு’, ‘ரெட்டைச் சுழி’ எல்லாம் லிமிடெட் ஸ்கிரீனிங்தான்.

இதுதான் தமிழ் சினிமா வணிகம். ஸ்டார்களை நம்பிதான் வியாபாரம் நடக்கிறது. திரையரங்கங்களும் புக் ஆகின்றன.

‘மேற்குத் தொடர்ச்சி மலை’க்கு நிகழ்ந்ததேதான் ‘பரியேறும் பெருமாள்’ படத்துக்கும் நிகழ்ந்திருக்கிறது. நாளை இன்னொரு சிறு படத்துக்கும் இதுவேதான் நிகழப் போகிறது.

எதிர்த்து குரல் கொடுத்து தீர்வு காண வேண்டியது இப்போதைய சினிமா வணிகத்தை ஆட்டிப் படைப்பவர்களை நோக்கித்தான்.

மற்றபடி இதில் சாதி எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை.

கே.என். சிவராமன் பதிவு

‘பரியேறும் பெருமாள்’ படத்துக்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காததற்கு சாதிதான் காரணம் என்ற அர்த்தத்தில் எழுதப்பட்ட சில நிலைத்தகவலை பார்க்க நேர்ந்ததால் இதை எழுத நேர்ந்தது.

இன்னொரு விஷயம், எப்பேர்பட்ட பெரிய நடிகரின் படமாகவே இருந்தாலும் அதன் வசூல் இன்று முதல் 3 நாட்கள்தான். பண்டிகை காலம் என்றால் எக்ஸ்டென்டட் லீவ்ஸ். அதன் பிறகு தியேட்டர் ஆக்குபென்சி 40% இருந்தாலே அதிகம்.

இதனால்தான் வாரம்தோறும் இப்போது படங்கள் ரிலீசாகின்றன.

எப்படி கோல்டன் ஜூப்ளி, சில்வர் ஜூப்ளி, 100 டேட்ஸ் எல்லாம் பழங்கதையோ அப்படித்தான் மவுத் டாக் பரவி தியேட்டருக்கு கூட்டம் வருவதும். ‘சேது’ காலம் இன்றில்லை.

எல்லா தியேட்டர்களும் ஃபர்ஸ்ட் ரன்னிங் ஆக மாறி விட்டன; செகண்ட் ரன்னிங்கை சேனல்ஸ் எடுத்துக் கொண்டன.

ஆக விரைவில் வார இறுதிகளில் மட்டும் தியேட்டர்கள் இயங்கும் காலம் வரலாம்.”