மும்பை

விவசாயிகள் போராட்டத்துக்குப் பின்னணியில் சீனாவும் பாகிஸ்தானும் உள்ளதாக மத்திய அமைச்சர் கூறியதற்கு சிவசேனா பதில் அளித்துள்ளது.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.   டில்லி – அரியானா சாலையில் நாடெங்கும் உள்ள விவசாயிகள் கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.   மத்திய அரசு போராடும் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியும் எவ்வித தீர்வும் ஏற்படாததால் போராட்டம் தொடர்கிறது.

விவசாயிகளின் பிரச்சினைகளைப் புரிந்துக் கொள்ளாமல் பாஜகவினர் போராட்டங்களைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.   நேற்று மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் ஒரு விழாவில் மத்திய அமைச்சர் ராவ்சாகேப் தன்வே கலந்துக் கொண்டார். அப்போது அவர் விவசாயிகளின் போராட்டத்தின் பின்னணியி8ல் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் கரங்கள் உள்ளதாகத் தெரிவித்தார்.

இது நாடெங்கும் பாஜகவினர் மீது கடும் எதிர்ப்பை உண்டாக்கி இருக்கிறது.  பல தலைவர்கள் பாஜக அமைச்சரின் இத்தகைய தவறான கருத்துக்குத் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சிவசேனா கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ரவுத், “மத்திய அமைச்சருக்கு விவசாயிகள் போராட்டத்துக்கு பின்னால் சீனா மற்றும் பாகிஸ்தானின் கரங்கள் இருப்பதாகத் தெரிய வந்தால் பாதுகாப்பு அமைச்சர் அவ்விரு நாடுகள் மீதும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்த வேண்டும்.  இது குறித்து குடியரசுத் தலைவர், பிரதமர் , மத்திய அமைச்சர் மற்றும் ராணுவத் தலைவர்கள் இது குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.