கெய்ரோ: அமெரிக்காவை அலற வைத்த அல்பாக்தாதி மரணத்தை உறுதி செய்த  ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, அதன் புதிய தலைவரையும் அறிவித்து இருக்கிறது.

அல்கொய்தாவிற்கு பிறகு, அமெரிக்காவை மட்டுமல்ல, உலக நாடுகளையும் அலற வைத்த தீவிரவாத இயக்கம் ஐஎஸ். அமெரிக்க படைகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தி நிலைகுலைய செய்தது.

அந்த அமைப்பின் தலைவன் அல்பாக்தாதி, அமெரிக்க படைகளின் அதிரடி தாக்குதலின் போது உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. தாக்குதல் வீடியோவையும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வெளியிட்டது.

இந் நிலையில், பாக்தாதி மரணத்தை ஐ.எஸ் இயக்கமும் உறுதி செய்திருக்கிறது. இது தொடர்பாக கூறப்பட்டு இருப்பதாவது: ஐ.எஸ் இயக்க தலைவர் மற்றும் செய்தி தொடர்பாளர் புனிதப்போரில் மரணமடைந்துள்ளனர்.

புதிய தலைவராக இப்ராஹிம் அல்குரேஷி செயல்படுவார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் அபு அல்ஹசான் அல் முஜாகீரும் பலியாகி விட்டதாக ஐஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

புதிய தலைவர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் யார் என்று தெரியாத நிலையே இருப்பதாக தெரிகிறது. இது குறித்து, ஸ்வான்சீ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரும், ஐஎஸ் இயக்கத்தை பற்றி ஆய்வில் ஈடுபட்டு வருபவரான தமிமீ கூறியிருப்பதாவது:

அல்குரேஷி என்ற பெயர் புதியதாக இருக்கிறது. அந்த இயக்கத்தின் மற்றொரு மூத்த தலைவர் ஹஜ் அப்துல்லாவா? என்பது குறித்து உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது என்று கூறினார்.