காங்கிரஸ், இஸ்லாமிய ஆண்களுக்கு மட்டுமான கட்சியா? :  பிரதமர் மோடி கேள்வி

முத்தலாக் ஒழிப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து  இஸ்லாமியர்களை ஆதரிப்பதாக கூறும் காங்கிரஸ் அம்மதத்தின்  ஆண்களுக்கு மட்டுமான கட்சியா என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று காங்கிரஸ் கட்சியை இஸ்லாமியர்களுக்கான கட்சி என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம், அசம்கர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பொதுகூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசியதாவது:

“காங்கிரஸ் என்பது இஸ்லாமியர்களுக்கான கட்சி என அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கூறியதாக நாளிதழ் செய்தியில் நான் படித்து தெரிந்துகொண்டேன்.

இதுதொடர்பாக கடந்த இரு நாட்களாக விவாதமும் நடந்து வருகின்றது. இயற்கை வளங்களின்மீது சொந்தம் கொண்டாட இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை உள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்னர் தெரிவித்து இருந்ததால் தற்போதைய

காங்கிரஸ் தலைவரின் கருத்தை கேட்டு நான் ஆச்சரியம் அடையவில்லை.

ஆனால், காங்கிரஸ் இஸ்லாமிய ஆண்களுக்கு மட்டுமான கட்சியா என நான் கேட்க விரும்புகிறேன். அந்த கட்சியில் இஸ்லாமிய பெண்களின் கண்ணியம் மற்றும் உரிமைகளுக்கு ஏதும் இடமுள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

இஸ்லாமிய பெண்களுக்கு ஆதரவான முத்தலாக் மசோதாவையும், பாராளுமன்றத்தையும்  காங்கிரஸ்காரர்கள் முடக்கியது ஏன்? பாராளுமன்றம் இன்னும் நான்கைந்து நாட்களில் மீண்டும் கூட இருக்கிறது. முத்தலாக், நிக்காஹ் ஹலாலா விவகாரங்களால் பாதிக்கபட்டவர்களை சென்று சந்தியுங்கள். அதன் பிறகு  உங்கள் கண்ணோட்டத்தை பாராளுமன்றத்தில் பதிவு செய்யுங்கள் என காங்கிரஸ்காரர்களுக்கு நான் தெரிவித்து கொள்கிறேன்” என்று மோடி பேசினார்.