படேல் இனத் தலைவர் மூலம் காங்கிரஸ் ஆதாயம் தேடுகிறதா : அலசும் தலைவர்கள்

கமதாபாத்

டேல் இனத் தலைவர் ஹர்திக் படேல் மூலம் ஆதாயம் அடைய காங்கிரஸ் முயல்வதாக மற்றொரு தலைவர் கூறி உள்ளார்.

படிதார் அனாமத் அந்தோலன் சமிதி (பாஸ்) என்னும் அமைப்பின் தலைவர் ஹர்திக் படேல் குஜராத் தேர்தலில் காங்கிரஸ் அணிக்கு ஆதரவளித்தது தெரிந்ததே.  இதைத் தொடர்ந்து அவர் பா ஜ கவுக்கு எதிராக மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.  இதனால் பாஜக எதிர்ப்பு அலை மேலும் வலுவாகி வருவதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பாஸ் அமைப்பின் மற்றொரு தலைவரான ஹிமன்ஷு ஹிர்பரா சமீபத்தில் இது பற்றிக் கருத்து தெரிவித்துள்ளார்.  அவர், “கடந்த வெள்ளிக்கிழமை பாஸ் அமைப்பு தனது மத்திய அலுவலகத்தை அகமதாபாத்தில் அமைத்து பாஜக எதிர்ப்பு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.

பாஜக வை எதிர்த்து ஹர்திக் படேல் அனேகமாக தினம் ஒரு பேரணி நடத்தி வருகிறார்.  அனைத்து பேரணிகளுக்கும் படேல் இன மக்கள் கலந்துக் கொண்டு ஆதரவு அளிக்கின்றனர்.  காங்கிரஸ் தரப்பில் இது வரை ராகுல் காந்தியை தவிர வேறு யாரும் எந்தப்  பேரணியும் நடத்துவதில்லை.  ஒரு சில நகரங்களில் காங்கிரஸ் தலைவர்கள் பிரசார உரை நிகழ்த்துவதிலும் அக்கறை காட்டுவதில்லை.

பாஸ் இயக்கம் அறிவித்துள்ள படேல் இனத்தவருக்கு ஒதுக்கீடு என்பது பல இளைஞர்களைக் கவர்ந்துள்ளது.  அதனால் லட்சக்கணக்கான இளைஞர்களும், பல தொழிலதிபர்களும் ஹர்திக் படேல் ஒவ்வொரு பேரணியிலும் கலந்துக்கொள்கின்றனர்.  ஆனால் 132 வருடப் பழமையான காங்கிரஸ் கட்சியில் உள்ள பல தலைவர்கள் ஆரம்பித்து இரு வருடமே ஆன பாஸ் போல பேரணிக்காக  செயல்படுவதில்லை.

குஜராத் மாநிலத்தை 30 வருடங்களுக்கு மேல் ஆண்ட காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் அதிகமாகவும் தொண்டர்கள் குறைவாகவும் உள்ளனர்.  ஆனால் பாஸ் இயக்கத்தில் லட்சக்கணக்கானோர் அடிமட்டத் தொண்டர்களாக பணி புரிந்து வருகின்றனர்.

இதை எல்லாம் பார்க்கும் போது பாஸ் தலைவர் ஹர்திக் படேல் மூலம் காங்கிரஸ் ஆதாயம் அடையப் பார்க்கிறதோ என சந்தேகம் எழுகிறது.” என குறிப்பிட்டுள்ளார்.  இதே கருத்தை பாஸ் இயக்கத்தின் மற்றுமுள்ள தலைவர்களான ஹஷிகார், தினேஷ் ஆகியோரும் தெரிவித்துள்ளனர்.