டெஹ்ரான்: ஈரானில் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதாக அந்நாட்டு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், கொரோனாவை ஈரான் நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்க, பல கட்டங்களைத் தாண்ட வேண்டியுள்ளது என்று அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஈரானில், இதுவரை 3739 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 136 உயிர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளன என்று சுகாதாரத்துறை பத்திரிகை தொடர்பாளர் கியானோஷ் ஜஹான்பூர் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2274 ஈரானியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 60,500 பேர் இதுவரை ஈரானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 31ம் தேதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தில் இருந்தது. தற்போது, அது படிப்படியாக குறைந்து வருகிறது. பலர் கொரோனா சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பி வருகின்றனர்.

ஈரான் அதிபர் ஹாசன் ரொஹானி சமூக விலகலுக்கு பொதுமக்கள் கட்டுப்படவில்லை எனில், ஈரான் இதுவரை கண்டிராத அழிவை சந்திக்க நேரிடும் என்றுள்ளார். சில பொருளாதார நடவடிக்கைகளை ஏப்ரல் 11ம் ‍தேதிக்குப் பிறகு படிப்படியாக மேற்கொள்ளலாம் என்று ரொஹானி தெரிவித்துள்ளார்.

பாரசீகப் புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு, ஈரானுக்குள் புகுந்த கொரோனா வைரஸ் ஈரானியர்களது வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.