சென்னை:

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பூமிக்கு பாரம் என்று நேற்று சேலத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக சாடியிருந்தார். அதற்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதில் அளித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அதில், சிதம்பரத்தை சிறுமைப்படுத்தாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காஷ்மீர் மாநில உரிமை பறிப்பை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் ஆற்றிய உரைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய பதிலை கூறாமல் பொறுப்பற்ற முறையில் விமர்சனம் செய்து இருக்கிறார்.

இந்தியாவின் நிதி மந்திரியாக இருந்து 10 நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்து வரலாறு படைத்த பொருளாதார சீர்திருத்த செம்மலை பார்த்து, “இவர் பூமிக்கு பாரமாக இருக்கிறார், நாட்டிற்கு இவரால் என்ன பயன்? இவர் கொண்டு வந்த புதிய திட்டம் என்ன?” என்று காழ்ப்புணர்ச்சி யுடன் கடுமையாக பேசியிருக்கிறார்.

ஏழை, எளிய மாணவர்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கல்விக்கடன் திட்டத்தை அறிவித்தவர். இதன் பயனாக 24 லட்சம் மாணவர்களுக்கு 56 ஆயிரம் கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டது. இதில், ஐந்தில் ஒரு பங்கு மாணவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

2004-2005-ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது, 54 லட்சத்து 80 ஆயிரத்து 380 கோடி ரூபாயாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2014-ல் ஆட்சியை விட்டு விலகுகிறபோது 1 கோடியே 5 லட்சத்து 27 ஆயிரத்து 674 கோடி ரூபாயாக இரு மடங்காக உயர்ந்தது.

சுதந்திர இந்தியாவில் வரலாறு காணாத சாதனைகளை நிகழ்த்தி, 2004-2009 வரையிலான காலகட்டத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் நமது நாட்டின் வளர்ச்சி விகிதத்தை 9 சதவீதத்திற்கு மேல் உயர்த்தியதில் ப.சிதம்பரத்தின் பங்கை பாராட்டாமல் எவரும் இருக்க முடியாது.

இத்தகைய சாதனைகளை நிகழ்த்தியதற்காக இந்தியாவின் சாதனைச்செல்வர் என்று மகுடம் சூட்டி தமிழகமே பாராட்ட வேண்டிய ப.சிதம்பரத்தை, விபத்தின் மூலம் முதல்-அமைச்சர் பதவிக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்ட மனம் இல்லை என்றாலும், சிறுமைப்படுத்தாமல் இருக்கலாமே.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.