ஆவணப்பட இயக்குநருக்கு ஆபாச போன்கள்: டாக்டர் கிருஷ்ணசாமி பதில் சொல்வாரா?

நெட்டிசன்:

– சி.மதிவாணன்( Mathi Vanan )அவர்களது முகநூல் பதிவு:

கக்கூஸ் பட இயக்குநர் தோழர் திவ்யாவிற்கு கொலை மிரட்டல் விடும், எச்சரிக்கை செய்யும், பாலியல் ரீதியில் இழிவு செய்யும் தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. சில நிமிடங்களுக்கு ஓர் அழைப்பு என்பதாக நிலைமை இருக்கிறது.

புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஒருவர் அழைத்ததாகவும் தகவல் இருக்கிறது. மென்மையாகப் பேசிய அவர், பின்னர் மிகக் கேவலமாகப் பேசியிருக்கிறார்.

என்ன பிரச்சனை?

தேவந்திர குல வேளார் அல்லது பள்ளர் பிரிவைச் சேர்ந்தவர்களும் மலம் அள்ளும் தொழிலில் இருக்கிறார்கள் என்று கக்கூஸ் படத்தில் பதிவு செய்ததை நீக்க வேண்டும் என்றும், அதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் பேசிaவர்கள் குறிப்பிட்டு இருக்கின்றனர்.

இன்றைய நிலையில் பல சாதிகளைச் சேர்ந்தவர்களும் மலம் அள்ளும் வேலையில், வறுமையின் காரணமாக, மிகக் கொடூரமான நிலையில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறகிறார்கள் என்ற சமூக யதார்த்தத்தை கக்கூஸ் படம் பதிவு செய்திருந்தது. இந்த அவலத்தை நீக்க அரசு கொண்டுவந்த சட்டத்தை அரசு நடைமுறைபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. எந்த மானுடரையும், சாதிப்பிரிவையும் இழிவு செய்யும் நோக்கில் படம் இல்லை. மாறாக, மானுடத்தின் மகோன்னதத்தைக் காக்க வேண்டும் என்ற ஆவேசம் படத்தில் இருந்தது.

முதலில் டாக்டர் கிருஷ்ணசாமி திவ்யா மீது வழக்குத் தொடுக்கப் போகிறார் என்ற கோணத்தில் செய்திகள் வெளிவந்தன. அவருக்கு ஆதரவானவர்கள் அந்த செய்தியைச் சமூக ஊடகங்களில் பரப்பினர்.

இப்போது அவரின் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நபர்கள் தொலைபேசியில் மிரட்டுவது, இழிவுபடுத்துவது, பெண் என்ற முறையில் கேவலப்படுத்துவது உள்ளிட்ட முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். சமூக ஊடகங்களிலும் இதுபோன்ற வேலை நடப்பதைப் பார்க்க முடிகிறது.

ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட டாக்டர் கிருஷ்ணசாமி தனக்கும் மேற்சொன்ன குற்றச் செயல்பாடுகளுக்கும் சம்பந்தமில்லை என்று அறிவிப்பாரா? அவரின் கட்சியினரைக் கட்டுக்குள் கொண்டு வருவாரா?

என்ன செய்யப் போகிறார் புதிய தமிழகத்தின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி?

கார்ட்டூன் கேலரி