டெல்லி: நாடு முழுவதும் 16ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவர் உள்பட  முன்களப் பணியாளர்களே ஆர்வம் காட்டவில்லை என்பது தெரிய வந்துள்ளது.  இதில் தமிழகம் கடைசி இடத்திலும், கர்நாடக மாநிலம் முதலிடத்திலும் உள்ளது.

உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவை கட்டுக்குள்  கொண்டு வர தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 16ந்தேதி தொடங்கிய தடுப்பூசி திட்டம் 5 நாட்களை கடந்து இன்று 6வது நாளாக தொடர்ந்து வருகிறது.

முதல்கட்டமாக மருத்துவர்கள் உள்பட முன்களப் பணியாளர்களுக்க தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும  இதுவரை மொத்தம் 7.86 லட்சம் மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   நாடு முழுவதும் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதன்கிழமை மாலை 6 மணி வரை  (கடந்த 5 நாட்கள்)7,86,842 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 82 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது.

அதிகபட்சமாக கர்நாடகத்தில் 1,19,186 பேரும், ஆந்திரத்தில் 88,145 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது தடுப்பூசி செலுத்தும் பணியில் தமிழகம், புதுச்சேரி மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் கடைசி இடத்தில் உள்ளன.

இந்த மாநிலங்களில் இதுவரை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட குறைவாகவே இருப்பதாகவும்,  தமிழகத்தில்  34.9%, புதுச்சேரியில் 34.6% பஞ்சாப் மாநிலத்தில் 27.6% என்ற அளவில்தான் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்து, மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண்,  50 சதவீதத்துக்கும் குறைவான அளவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்துள்ள மாநிலங்களுடன் தொடர்ந்து பேசி, அங்குள்ள சிக்கல்கள் மற்றும் கொரோனா தடுப்பூசி மீதான அச்சம் குறித்த பிரச்னைகளை தீர்க்க தேவையான நடவடிக்கைகளை ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.இது ஒன்றும் புதிய பிரச்னையல்ல, ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து மற்றும் அம்மை தடுப்பூசி மருந்துகள் செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டபோதும், பொதுமக்களுக்கு இது தொடர்பாக அச்சம் இருந்தது, இந்தநிலை விரைவில் மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து, அறிக்கைகள் மூலம் மக்களுக்கு எச்சரிக்கை செய்து வருகின்றன. இது ஒருபுறம் இருந்தாலும், இருந்தாலும் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டாத  நிலை பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.