மதுரை: திராவிடர் கழகம் ஜனநாயகத்திற்கு எதிரானது என அறிவிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், திராவிடர் கழகம் சட்டத்திற்கு விரோதமானதா என கேள்வி எழுப்பிய நீதிபதிள் வழக்கை ஒத்தி வைத்தனர்.
பழனியைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் திராவிடர் கழகத்தை தடை செய்ய வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில், “சில நாள்களுக்கு முன்பு தமிழ் கடவுள் முருகனையும், கந்த சஷ்டி கவசத்தையும் இழிவுபடுத்தும் வகையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் வீடியோக்கள் பதிவிடப்பட்டன. சமூகவலைதளங்களில் கணக்கு தொடங்கி வீடியோக்களை பதிவிட எந்த கட்டணமும் தேவையில்லை என்பதால் இதுபோன்ற சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருகின்றன. கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பு  திராவிடர் கழகத்தின் ஒரு பிரிவாகவே செயல்பட்டு வருகிறது. இதன் மூலம்,  இந்து மக்களையும் அவர்களது எண்ணங் களையும் திராவிடர் கழகம் புண்படுத்தி வருகிறது. இது தொடர்பாக தமிழகஅரசிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, இதுபோன்ற நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கி.வீரமணி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும், திராவிடர் கழகத்தை ஜனநாயகத்திற்கு எதிரானது என அறிவித்து, அதன் உடமைகளை பறிமுதல் செய்ய உத்தரவிட வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு  நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது,  மனுதாரர் விளம்பரத்திற்காக இந்த மனுவை தாக்கல் செய்தாரா என்றும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசியல் சாசன விதி 51 பிரிவின்படி  திராவிடர் கழகம்  எந்த வகையில் சட்டத்திற்கு எதிரானது என்று கேள்வி எழுப்பி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.