குருமூர்த்தி தேவதூதரா? அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

சென்னை,

நேற்று சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டு விழா கூட்டத்தில் பேசிய, துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி, தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று கூறினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், ஆடிட்டர் குருமூர்த்தி என்ன தேவதூதரா? என காட்டமாக கேள்வி எழுப்பினார்.

துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய குருமூர்த்தி, ரஜினியின் ஆன்மிக அரசியல் கழகத்திற்கு அப்பாற்பட்டு, பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்தால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும்,  தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என்றும்  கூறினார்.

இந்நிலையில், இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மா.பா.பாண்டியராஜன், பெஞ்சமின் உள்பட அதிகாரிகள்   மாலை அணிவித்தனர்.

பின்னர் அமைச்சர் ஜெயக்குமாரிடம், குருமூர்த்தியின் பேச்சு குறித்து  செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது,

சொல்வதெல்லாம் நடப்பதற்கு குருமூர்த்தி தேவதூதரா? என காட்டமாக  கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜெயக்குமார், அவர் கூறுவதுபோல் தமிழகத்தில் எதுவும் நடக்காது என்றும் தெரிவித்தார்.

ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு சாதாரண மனிதர்தான் என்றும்,  ரஜினியுடன் பா.ஜனதா கூட்டணி வைத்தாலும் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும். தமிழக மக்கள் அம்மாவின் அரசுக்குதான் ஆதரவு தருவார்கள் என்றார்.

மேலும், உள்ளாட்சி தேர்தல் ஆனாலும் சரி, நாடாளுமன்ற தேர்தல் ஆனாலும் சரி, 2011-ல் நடைபெறும் சட்ட மன்ற தேர்தலிலும் சரி அ.தி.மு.க.தான் வெற்றி பெறும். மக்கள் அம்மாவின் அரசுக்குதான் ஆதரவு.

இவ்வாறு அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி