அவசர உதவிக்கு மருத்துவமனையை நாடும் நோயாளிகளுக்கு கொரோனா சோதனையா? மத்தியஅரசு விளக்கம்…

டெல்லி:

வசர உதவிக்கு மருத்துவமனையை நாடும் நோயாளிகளுக்கு கொரோனா சோதனை செய்ய வற்புறுத்தக்கூடாது என்று  மத்தியஅரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதி உள்ளது.

இதுகுறித்து அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தி, நோயாளிகளுக்கு விரைவான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பல்வேறு நோய்களால்  உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், அரசு மருத்துவமனைகளுக்கோ, தனியார் மருத்துவ மனைகளுக்கோ சிகிச்சைக்காக சென்றால், அவர்களிடம் கட்டாயப்படுத்தி கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பல மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்து வருகின்றனர்.

இதனால், டயாபட்டீஸ், புற்றுநோய், டயாலிஸ் போன்று தொடர் சிகிச்சை மேற்கொண்டுவரும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு புகார்கள் குவிந்துள்ளன.

இதையடுத்து. சுகாதார அமைச்சக செயலாளர் பிரீத்தி சூதான் மாநில தலைமைச் செயலர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில்,  அவசர மருத்துவ உதவி தேடி வரும் நோயாளிகளிடம் முதலில் கொரோனா சோதனை செய்யுமாறு தனியார் மருத்துவமனைகள் வற்புறுத்தக்கூடாது என்பதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.